Kanchipuram Chariot Festival: "கோவிந்தா கோவிந்தா " 79 அடி பிரம்மாண்டம்..! மக்கள் அலையில் மிதந்து வந்த திருத்தேர்..!
kanchipuram perumal kovil ther : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாள். முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 5 நிலைகள் கொண்ட 79 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளித்த படி பவனி வரும் வரதராஜ பெருமாள்.
வைகாசி பிரம்மோற்சவம்
காஞ்சிபுரம் ( kanchipuram news ) : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் திருக்கோயில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே வரதராஜ பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, சிக்கு தாடை கொண்டை அணிந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் தாயார் சடாரியும் மேளதாளங்கள் முழங்க, கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தேரடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருத்தேரில் எழுந்தருள செய்தனர்.
தேரோட்டம்
5 நிலைகள் கொண்ட 79 அடி உயரம் உள்ள திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வணங்கி வழிபட்டனர். பின்னர் மேள தாளங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். தேர் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தேரின் பிரம்மாண்டம் என்ன ?
வரதராஜ பெருமாள் கோயில் திருத்தேருக்கு 6 சக்கரங்கள் உள்ளன, சுமார் 65 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேராக உள்ளது. நான்கு சக்கரங்கள் இரும்பு சக்கரமாக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது சுமார் 79 அடி உயரமும் 13 அடுக்குகளையும் கொண்ட தேராக உள்ளது. அகலம் சுமார் 35 அடி உள்ளது. தேர் முழுவதும் பெருமாளின் 9 அவதாரங்களும் மர சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவதைகளின் சிற்பங்கள், விநாயகர் அம்மன் போன்ற கடவுள்களின் சிற்பங்களும் தேரை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த உற்சவங்கள் என்னென்ன ?
மே மாதம் 27ஆம் தேதி ( 27- 05-2024 ) : பகல் 2:30 மணி அளவில் தொட்டி திருமஞ்சனம் மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவுஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மே மாதம் 28ஆம் தேதி ( 28- 05-2024 ) : ஆள்மேல் பல்லாக்கு ( மட்டை அடி உற்சவம் ) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.