Irumbai Mahakaleshwar Temple: உங்களுக்கு பேச்சு குறைபாடு இருக்கா..? - இந்த கோயிலுக்கு போனால் சரளமா பேச்சு வரும்... ஒருமுறை போய்ட்டு வாங்க
சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து 'உஷா, பிரதியுஷா' ஆகிய இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோயில் காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் மொரட்டாண்டி சுங்கசாவடி அருகே இரும்பை கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மாகாளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. எந்நேரமும் சிவ சிந்தனையிலேயே இருப்பவர்கள் தான் சித்தர்கள், அவர்களின் வழி வந்தவர்தான் கடுவெளி சித்தர். அவர் தங்கியிருந்த இரும்பை என்ற ஊரில் உள்ளது தான் மாகாளீஸ்வரர் திருக்கோயில்.
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். சோழ மன்னர்கள் காலத்தில் இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இத்தளத்தின் இறைவனான சிவபெருமான், சிவலிங்க வடிவத்தில் மாகாளீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மகாகாளர் என்கிற முனிவர் இக்கோயிலின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். எனவே அவரின் பெயராலேயே 'மகாகாளேஸ்வரர்' என்றும், 'மாகாளீஸ்வரர்' என்றும் பெயர் பெற்று விளங்குகிறார். இவரது உற்சவர் திருநாமம், சந்திரசேகரன் என்பதாகும்.
பிரம்மஹத்தி தோஷம்
இந்த ஆலயத்தில் நாயகி, குயில் மொழி நாயகி என்று அழைக்கப்படுகிறார். சுந்தர நாயகி என்ற பெயரும் உண்டு. மதுரை புராண காலத்தில் இந்த ஊர், 'திரு இரும்பை மாகாளம்' என அழைக்கப்பட்டது. இரும்பன், இரும்பாறை ஆகிய இரண்டு அசுரர்களை காளி அவதாரம் எடுத்து, பார்வதி தேவி வதம் செய்தாள். இதனால் அன்னைக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் விலக அன்னை இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். இதையடுத்து அன்னையின் தோஷம் நீங்கியதாக சொல்லப்படுகிறது.
கடுவெளி சித்தர்
முற்காலத்தில் இந்த ஊரில் கடுவெளி சித்தர் தங்கியிருந்தார். அந்த காலத்தில் அந்த ஊரில் மழையே பெய்யவில்லை. முனிவரின் கடுமையான தவத்தின் காரணமாகத் தான் மழை பெய்யவில்லை என்று எண்ணிய அப்பகுதி மக்கள், ஒரு நடன மங்கையை அழைத்து வந்து, முனிவரின் தவத்தைக் கலைத்தனர். சலங்கை ஒலியும், இசை சப்தமும் முனிவரின் தவத்தைக் கலைத்தது. தன் தவம் கலைந்ததால் கடுவெளி சித்தர் பெரும் கோபத்துடன் மக்களைப் பார்த்தார்.
ஊரில் மழைப்பொழிவு இல்லை
இதனால் பயந்து போன மக்கள், உங்களின் தவத்தால் தான் ஊரில் மழைப்பொழிவு இல்லை என்று எண்ணியதாலும், ஊரில் மழை பெய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும் தான் இவ்வாறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்தனர். இதனால் மனம் இறங்கிய கடுவெளி சித்தர், அந்த ஊரில் சிவ தொண்டு செய்தார். அதன் பயனாக அந்த ஊரில் நல்ல மழை பெய்து, பஞ்சம் நீங்கியது. ஒரு முறை ஊரில் சிவன் பெருவிழா நடந்தது. இறைவனை ஊர்வலமாக எடுத்துச்சென்றனர். அந்த ஊர்வலத்தின் முன்பாக நாட்டியப் பெண் ஒருவர், நடனமாடியபடி சென்றார். அப்போது அவளது ஒரு கால் சிலம்பு ஒன்று கழன்று விழுந்தது. கடுவெளி சித்தர் அந்த சிலம்பை எடுத்து அந்தப் பெண்ணின் காலில் மாட்டிவிட்டார். இதைக்கண்ட மக்கள், முனிவரை தவறாக பேசினர்.
இதனால் கடும் கோபமும், வேதனையும் அடைந்த கடுவெளி சித்தர், சிவபெருமானின் மீது ஒரு பதிகம் பாடினார். அப்போது இந்த ஆலயத்தின் சிவலிங்கம் மூன்றாக வெடித்து சிதறியது. இதைக்கண்டு மக்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். பின்னர் மன்னரும், மக்களும் கடுவெளி சித்தரை வேண்டிக்கொள்ள, அவர் சினம் நீங்கி மீண்டும் ஒரு பதிகம் பாடினார். இதையடுத்து மீண்டும் சிவலிங்கம் ஒன்றிணைந்தது. இங்கு அரசமரத்திற்கு இடையில் அமர்ந்து கடுவெளி சித்தர் செய்த தவத்தை, அந்த மரத்தின் கிளையில் குயில் வடிவில் இருந்து அம்பாள் கவனித்து வந்ததாகவும், அந்த தவம் பற்றி அவர் சிவபெருமானிடம் கூறியதால் அன்னைக்கு குயில்மொழி நாயகி' என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அம்பாள் தெற்கு திசை பார்த்தவாறு தனி சன்னிதியில் மகாலட்சுமி கோலத்தில் காட்சி தருகிறார்.
இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியன்
கோயிலின் மேற்கு பிரகாரத்தில் மேற்கு திசை பார்த்தபடி சந்திரன் காட்சி தருகிறார். இவருக்கு பால் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபடுபவர்கள், கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. நவக்கிரக நாயகர்கள் அனைவரும் தங்கள் மனைவியருடன் காட்சி தருகின்றனர். சூரிய பகவான் தாமரை மலர் மீது அமர்ந்து 'உஷா, பிரதியுஷா' ஆகிய இரு மனைவியரும் தனது மடி மீது அமர்த்தி இருக்கும் சூரியனின் அதிசய கோலமாக இக்கோவில் காணப்படுகிறது.
பேச்சு குறைபாடு
பேச்சு குறைபாடு உள்ளவர்கள், இசைக் கலையை பயில்பவர்கள், இசைக் கலைஞர்கள், அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து அந்த தேனின் சில துளிகளை தங்கள் நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இதனால் தங்களின் குரல் வளம் மற்றும் இசைத்திறன் மேம்படுவதாக பலன் பெற்றவர்கள் கூறுகின்றனர். ஆயுள் விருத்தி ஏற்படவும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொண்ட போதும் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டதாக நினைப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் கோரிக்கைகளும் விருப்பங்களும் நிறைவேறும்.