ஆன்மீக சுற்றுலா பிரியர்களுக்கு நற்செய்தி! திருநெல்வேலியிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடிக்கு சிறப்பு ரயில் பயணம்
ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி எனும் பெயரில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என முதற்கட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகளை குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் சிறப்பு அம்சங்களுடன் இயக்கப்படுவது சுற்றுலா ரயில் ஆகும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி மூலம் 'பாரத் கௌரவ்' போன்ற ரயில்கள் முக்கிய இடங்கள் மற்றும் ஆன்மீக தலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள், பயணிகளின் வசதிகாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி சார்பில் பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. ஜோதிர்லிங்கம் மற்றும் ஷீரடி எனும் பெயரில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் என முதற்கட்ட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த ரயில், நாசிக், ஷீரடி, சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களைப் பார்வையிடும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த சுற்றுலா நவம்பர் 16ஆம் தேதி முடிவடைகிறது.திருநெல்வேலியில் இருந்து தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் விஜய வாடா ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான பயணக் கட்டணம், முன்பதிவு மற்றும் சுற்றுலா விவரங்களுக்கு ஐஆர்சிடிசி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை- 90031 40739, 82879 31964, மதுரை -8287931962, 82879 32122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருச்சி- 82879 32070, கோவை- 90031 40655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது அந்தந்த ரயில் நிலையங்களுக்குச் சென்று தகவலை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும், www.irctc.com என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.





















