Hanuman Jayanti 2024 : பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஹனுமன் ஜெயந்தி விழா....2000 லிட்டர் பாலபிஷேகம்
விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி சேஷத்திரம் வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாச்சலபதி மற்றும் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் 36 அடியில் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு வருகிறார். 11.01.2024 ஆம்தேதி வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி விழா பஞ்சவடீ சேஷத்ரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 2000 லிட்டர் பாலபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் 36 அடி ஸ்ரீஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதன் அங்கமான ஹனுமத் ஜெயந்தி விழா 07.01.2024ஆம் தேதி தொடங்கி, இன்று 11.01.2024.ஆம் தேதி ஸ்ரீ சீதாகல்யாண உற்சவத்துடன் பூர்த்தியாக உள்ளது.
ஏழுகால பூஜைகள்
முதற்காலம் தொடங்கி ஆறாம் காலம் முடிய ஒவ்வொரு காலத்திலும் புண்யாஹவாசனம், பஞ்சஸூக்தஹோமம், மூலமந்த்ரஹோமம், பூர்ணாஹூதி, சாற்று முறை, லட்சார்ச்சனை நடைபெறும் 7 ஆம் காலம் 11.01.2024 இன்று காலையில் முடிவடைந்தது.
இவ்விழாவினை முன்னிட்டு 08.01.2024 அன்று காலை முதல் 11.01.2024 காலை 8.00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. 2000 லிட்டர் பாலபிஷேகம் 11.01.2024 வியாழக்கிழமை காலை 4.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், கோபூஜை, தனுர்மாத பூஜை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து காலை 6.00 மணிக்கு மேல் யாகசாலையில் 7.ஆம் காலமான வேள்வி நடத்தப்பட்டு வருகிறது.
2000 லிட்டர் பாலபிஷேகம்
பின்பு சரியாக காலை 8.30.மணிக்கு 2000 லிட்டர் பாலபிஷேகம் மற்றும் வாசனை திரவியங்களுடன் 36 அடி ஸ்ரீஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு மேல் யாகசாலையில் மஹா பூர்ணாஹூதி முடிக்கப்பட்டு கெடம் புறப்பட்டு ஆஞ்சநேயர் சன்னதிக்கு வந்தடைந்து ப்ரோசக்ஷனம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை சாற்றப்பட்டும், பிரம்மாண்ட அலங்காரமும் செய்யப்படும்.
தெய்வீக இன்னிசைக் கச்சேரி
காலை 10.30 மணிக்கு மேல் சூப்பர் சிங்கர் புகழ் பெற்ற திருமதி. அருணா அவர்களும் உதய ராகம் முரளி அவர்களும் இணைந்த தெய்வீக இன்னிசைக் கச்சேரி நடைபெறும்.12.00 மணிக்கு மேல் ஸ்ரீஆஞ்சநேயருக்கு வைகானச ஆகம முறைப்படி வேத விற்பன்னர்களால் திருவாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். தொடர்ந்து 36 அடி ஸ்ரீஆஞ்சநேயருக்கு புஷ்ப விருஷ்டி (வண்ண உதிரி புஷ்பங்களால் அபிஷேகம்) நடைபெறும்.
சிறப்பு அன்னதானம்
வரும் பக்தர்களுக்கு அன்று புகழ் பெற்ற சென்னை, மயிலாப்பூர் ஸ்ரீமான். செல்லப்பா கேட்டரிங் அவர்களால் சிறப்பு அன்னதானம் காலை 11.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும். இந்த சிறப்பு அன்னதானத்தை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் ஏற்பாடு செய்கிறது. மேலும் 1.30 மணிக்கு மேல் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்படும்.
ஸ்ரீ சீதா கல்யாணம்
இன்று மாலை 4.00 மணிக்கு மேல் ஸ்ரீராமர் சீதை வசந்த மண்டபத்தில் எழுந்தருளபட்டு சீதா கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் இலங்கை, யாழ்ப்பாணம் புகழ் பெற்ற ஸ்ரீமான; PS பாலமுருகன், குமரன் அவர்களின் நாதஸ்வரமும் திருப்பங்கூர் முத்துக்குமாரசுவாமி அவர்களின் சிறப்பு தவிலும் சேர்ந்து மங்கள இசை நடைபெறும். வரும் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, மற்றும் தண்ணீர் வசதி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விழா ஏற்பாடுகளை கோவிலின் பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா ட்ரஸ்டின் மேனஜிங் டிரஸ்ட் மற்றும் நிர்வாக அறங்காலவர் குழு ஏற்பாடு செய்து வருகிறது