புதுக்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு
புதுக்கோட்டையில் ஊர்வலமாக எடுத்து சென்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 31-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர். இந்தநிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு வரப்பட்டு பின் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலத்தை பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார். ஊர்வலம் மேல 4-ம் வீதி, தெற்கு 4-ம் வீதி பழைய பஸ் நிலையம் வழியாக புதுக்குளத்திற்கு சென்று அங்கு விநாயகர் சிலைகள் தண்ணீரில் கரைக்கப்பட்டன. 5 அடி சிலையில் இருந்து 15 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டன. இதில் 35 விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன. மேலும் ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கீரனூர் கள்ளர் தெரு, ஹவுசிங் யூனிட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டன. அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் கொடுத்து பூஜை செய்தனர் பின்னர் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் திருச்சி புறவழிச்சாலையில் உள்ள குளக்கரையில் கரைக்கப்பட்டன. அறந்தாங்கியில் இந்து முன்னணி சார்பில் வடகரை முருகன் கோவிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. நேற்று விநாயகர் சிலையை இந்து முன்னணியினர், பா.ஜனதாவினர் ஊர்வலமாக பட்டுக்கோட்டை சாலை, களப்பக்காடு, கட்டுமாவடிமுக்கம் வழியாக சென்று வீரமாகாளியம்மன் கோவில் குளத்தில் விநாயகர் சிலையை கரைத்தனர்.
பொன்னமராவதி சிவன் கோவில் எதிரே உள்ள மேடையில் விநாயகர் சிலை வைத்து வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று மாலை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிவன் கோவிலில் இருந்து தொடங்கி நாட்டுக்கல், வலையப்பட்டி, அடைக்கண் ஊரணி, மலையாண்டி கோவில், பொன்-புதுப்பட்டி, காந்தி சிலை அண்ணா சாலை பஸ் நிலையம் வழியாக அமரகண்டான் ஊரணிக்கு வந்தடைந்தது. பின்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட விநாயகருக்கு கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பின்பு அமரகண்டான் ஊரணியில் ஒன்றன்பின் ஒன்றாக கரைக்கப்பட்டன. கோட்டைப்பட்டினத்தில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவுறைகளையும், எச்சரிக்கைகளையும் காவல்துறையின் வழங்கினார். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டது. கண்காணிப்பு கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்