Dussehra 2022 Date: நவராத்திரி நெருங்குகிறது.. நேரம், தேதி.. முழு விவரம் அறிய இதைப் படிங்க..
Dussehra 2022 Date and Time: இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 ஆம் தேதி வரை சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதன் முடிவில் அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி நெருங்கி வரும் வேளையில் இந்த வருட நவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எப்போது என்று பார்க்கலாம்.
நவராத்திரி 2022
நவராத்திரியின் 9 நாட்கள் சிறப்பாக பூஜை செய்யப்பட்டு கடைசி இரண்டு நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்று கொண்டாடுவார்கள். ஆயுத பூஜை அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைப்பார்கள். வேலையிடம், அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்வார்கள். அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.
தேதி & நேரம்
நவராத்திரி என்பது நாட்டில் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் - சைத்ரா மார்ச் ஏப்ரல் மாதத்திலும், சாரதா அக்டோபர் நவம்பர் மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 04 ஆம் தேதி வரை சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அதன் முடிவில் அக்டோபர் 4 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. தசமி திதி அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 02:20 மணிக்கு தொடங்கி அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு முடிகிறது.
எதற்காக கொண்டாடுகிறோம்?
மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்ட சமயத்தில் திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானதால் இச்சா சக்தி - விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி - ஞானம், அறிவு பெறுதல், கிரியா சக்தி - ஆக்கம், உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெற பூஜை செய்யப்படுகிறது. இதற்காகவே இந்த 9 நாட்களை வெகு விமரிசையாக இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.
நவராத்திரி கொண்டாட்டம்
நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலுதான். படிப்படியாக இறைவனின் அருள் நிறைந்த பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவார்கள். இதற்கு ஒரு புராண கதையும் உண்டு. ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டாராம், தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு காளி ரூபத்தைச் செய்து, அதனை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வழிபட வேண்டும் என்று கூற, அதே போல செய்தார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உருவாக்கினார் என்பது கதை. இதனை அடிப்படையாக கொண்டுதான் கொலு செய்து வேண்டும் பழக்கம் வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்