தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு திடீர் அறுவை சிகிச்சை - கலக்கத்தில் பக்தர்கள்
கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் தற்போது 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். மேலும், இவர் ஆதீனமாக பொறுப்பேற்ற நாள் முதல் ஆதீனத்திற்கு சொந்தமான பல்வேறு கோயில்களில் குடமுழுக்குகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கொற்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமையான வீரட்டேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் வரும் மூன்றாம் தேதி தருமபுரம் ஆதீன சன்னிதானம் முன்னிலையில் நடைபெற உள்ளது. அதற்காக தருமபுர ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பாதயாத்திரை ஆக கொற்கை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்று கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டிருந்த ஆதீன மடாதிபதிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனைகளில், மஞ்சள் காமாலை மற்றும் பித்தப்பையில் கல் உள்ளது கண்டறியப்பட்டது. அதனை அடுத்து அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட ஆதீன மடாதிபதிக்கு இன்று காலை பித்தப்பையை மருத்துவர்கள் அகற்றி சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்த நிலையில், ஓய்வெடுக்கமால், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மருத்துவமனையில் இருந்து நேராக கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு தருமபுரம் ஆதீன மடாதிபதி திரும்புவதாக கூறி சென்றுள்ளார். மேலும் அவர் தொடர்ந்து ஆதீனம் வழக்கமான சொக்கநாதர் பூஜையில் ஈடுபடுவார் என்றும், பார்வையாளர்கள் குரு மகா சன்னிதானத்தை பார்ப்பதற்கும், ஆசி பெறுவதற்கும் வர வேண்டாம் என்று ஆதீன பொது மேலாளர் மணி விடுத்துள்ள அறிக்கையில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.