Naan Mudhalvan UPSC Scheme: நான் முதல்வன் திட்டம்.. யுபிஎஸ்சி ஊக்கத்தொகை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் பெற நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு வெளியாகி உள்ளது.
நான் முதல்வன்- போட்டித் தேர்வு பிரிவின்கீழ் தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் பெற நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் தெரிவித்து உள்ளதாவது:
''நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 07.03.2023 அன்று துவங்கி வைக்கப்பட்டது. அப்பிரிவானது தமிழ்நாட்டு இளைஞர்கள், மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் இட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் 2023- 24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின் கழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள் , மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் 7,500 ரூபாய், பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊக்கத்தொகைக்கான 1000 பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 02.08.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு 17.08.2023 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நான் முதல்வன் மற்றும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு 10.09.2023 அன்று நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு 30.08.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நான் முதல்வன் ஊக்கத் தொகைக்கான மப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்'' என்று நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஹால் டிக்கெட்டை https://nmcep.tndge.org/login என்ற இணைப்பை க்ளிக் செய்து பெறலாம்.
நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு: என்ன அம்சங்கள்?
"நான் முதல்வன்" திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது.
அரசுப்பணி ஒன்றையே கனவாகக் கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். மத்திய அரசுப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பை கணிசமான அளவில் அதிகரித்து வெற்றிபெற செய்வதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் படிக்கும் நோக்கத்தையும் கொண்டு "நான் முதல்வன்" போட்டித் தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்டது.
கூடுதல் தகவல்களுக்கு: 9043710214 / 9043710211 (10:00 am – 05:45 pm)
இ- மெயில் முகவரி: nmcegrievances@naanmudhalvan.in