புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக பணி தொடக்கம்
புகழ்பெற்ற குரு பரிகார ஆலயமான மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்திற்கான பாலஸ்தாபனம் எனப்படும் பாலாலயம், தருமபுர ஆதீன மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையும் புகழும் வாய்ந்த வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட கோயிலில் வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர். விநாயகர், முருகன், துர்க்கை, மேதாதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உபசன்னதிகளும் உள்ளன. சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம். நந்தி பாடிய எட்டு பாடல்களை பாடி மேதாதட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு சகல தோஷங்கள் பாவங்கள், மற்றும் ஆணவங்கள் நீங்கி ஞானம் கிடைக்கும்.
கஷ்டங்களைப் போக்கும் வரத்தை இத்தலத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. நந்தியின் செருக்கை, அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம். இத்தகைய சிறப்பு மிக்க இந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த 2004 -ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் ஞானாம்பிகை உள்ளிட்ட சுற்று ஆலயங்கள் ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலஸ்தாபனம் எனப்படும் பாலாலயம் இன்று காலை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க விமான பாலாலயம் செய்யப்பட்டது. முகூர்த்த கால் நட்டுவைத்து திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை காவிரி நகர் ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நகராட்சி சமுதாயக்கூடத்தில் தற்காலிக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தஞ்சை சரக டிஐஜி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தனர்.
தமிழகத்தின் 38 -வது புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் 2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்துறை அலுவலகத்திலும் இயங்கி வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இடம் கையகப்படுத்தப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், எஸ்பி அலுவலகம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வேளாண்துறையில் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ள துறைகள் செயல்பட இடம் தேவைப்பட்டதால் எஸ்பி அலுவலகம் வேளாண்துறை அலுவலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை காவிரி நகர் ஆரோக்கியநாதபுரத்தில் நகராட்சி சமுதாயக்கூடத்தில் தற்காலிக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. நிஷா முன்னிலையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி மாவட்ட ஆட்சியர் லலிதா குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட எஸ்பி ஜவகர், மயிலாடுதுறை ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். குற்றவியல் ஆவண காப்பகம், சைபர் கிரைம், காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு, ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட காவல்துறைக்கு என்று உள்ள அனைத்து அலுவலகங்களும் இன்று முதல் இங்கு செயல்பட தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரிடையாக வந்து தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா தெரிவித்துள்ளார்.