Srivilliputhur Andal Temple: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழா.. 22 ம் தேதி மஹா ஆடிப்பூர தேரோட்டம்..!
ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப் பூரம் திருநாள் மிகவும் சிறப்பானது.திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று போற்றப்படுகிறது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மகாவிஷ்ணுவின் 108 வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் மீது கொண்ட பக்தியால் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை இன்றைக்கும் வைணவ தலங்களில் பாடப்படுகிறது.
மகாவிஷ்ணுவின் 12 ஆழ்வார்களின் ஒருவரான ஆண்டாள் அவதரித்தது திருஆடிப்பூரம். பூமாதேவியின் அம்சமாக துளசி செடியில் அவதரித்த ஆண்டாளை வளர்த்தவர் பெரியாழ்வார். இறைவனுக்காக தொடுத்த மாலையை தான் சூடி அழகு பார்த்து பின்னர் இறைவனுக்கு கொடுத்த ஆண்டாளை சூடிக்கொடுத்த சுடர்கொடியாக போற்றுகின்றனர் பக்தர்கள். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆண்டாள் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருந்த பெரியாழ்வாருக்கு துளசி செடிக்கு அடியில் ஆண்டாள் சிசுவாக கிடைத்தாள்.ஆண்டாள் விடியற்காலையில் பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுத்து பெருமாளுக்கு அளிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் ஆண்டாளோ பெரியாழ்வார் தொடுக்கும் மாலைகளை தான் முதலில் அணிந்து பார்த்த பின்னரே பெருமாளுக்கு அளித்தார். இதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் ஆண்டாள் மீது கடிந்து கொண்டார். இறைவனிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். அன்று இரவு இறைவன் பெரியாழ்வாரின் கனவில் வந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே தனக்கு வேண்டும் என்றார். உடனே கனவிலிருந்து விழித்த பெரியாழ்வார், ஆண்டாள் சாதாரண குழந்தை அல்ல. அவள் தெய்வக்குழந்தை என புரிந்து கொண்டார். பின்னர் ஆண்டாள் மண வயதை அடைந்ததும், எம்பெருமானின் கட்டளைப்படி ஸ்ரீரங்கம் அழைத்துச் செல்ல. அங்கு ஸ்ரீ ரங்கநாதரிடம் ஒளியாய் சேர்ந்து கொண்டார்.
தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆடிப் பூரம் திருநாள் மிகவும் சிறப்பானது. ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை விரதம் இருந்து வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் ஆலயங்கள் அனைத்திலுமே வளையல் காப்பு அணிவிக்கும் உற்சவம் நடத்தப்படும். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களை வாங்கித் தந்து வழிபட்டு அவளது பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்களங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக்கோலம் கொண்ட நாள் என்பதால் குழைந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொடியேற்றத்துடன் துவங்கிய 12 நாள் ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 18 ஆம் தேதி அன்று கருட சேவையும் அதனை தொடர்ந்து 20ஆம் தேதி சையன சேவையும் நடைபெறும்.முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூர தேரோட்டம் வரும் 22 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. பெரிய திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர்.