Aadi 2023: ஆடி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபடும் தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடுகள்
முருகனுக்கு அறுபடை வீடுகள். இவை அனைத்தும் தஞ்சாவூரில் அமைந்துள்ளது. எப்படின்னு தெரியுங்களா. தெரிந்து கொள்வோம்.
தஞ்சாவூர்: முருகனுக்கு அறுபடை வீடுகள். இவை அனைத்து தஞ்சாவூரில் அமைந்துள்ளது. எப்படின்னு தெரியுங்களா. தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம்.
அப்படி தஞ்சையில் உள்ள முதல் படைவீடு தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்தான். மூலவர், குன்றின் மேல் வீற்றிருப்பது போல் உயரமான இடத்தில் உள்ளதால் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.
2ம் படைவீடு: தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடக்கிறது.
3ம் படைவீடு: தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மூன்றாம் படைவீடு. இந்திரன் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. முருகனின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இங்கு முருகப்பெருமான் சன்னிதியில் யானை உள்ளது அரிய காட்சி. உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன.
4ம் படைவீடு: தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில்தான் அது. சுவாமி மலையில் போல் இங்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் உட்பட முருகனைத் தவிர 12 சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் உள்ளது தனிச்சிறப்பு. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் கஷ்டம் தீரும் என்பது ஐதீகம்.
5ம் படைவீடு: தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் 5ம் படைவீடு. இங்கு வள்ளி- தெய்வானையுடன் சுவாமி அருள்பாலிக்கிறார். இந்த கோயில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். இக்கோயிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது.
6ம் படைவீடு: தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆறாம் படைவீடு. மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னது போல் பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்று பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த அறுபடை வீடுகளுக்கும் தான் தஞ்சையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடி மாதத்தில் பால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.