Aadi Krithigai Fasting: இரண்டு நாள் வரும் ஆடிக்கிருத்திகை.. எந்த நாளில் என்ன வேண்டுதலுக்கு விரதம் இருக்கனும்?
Aadi Krithigai 2025 Fasting: பிரசித்தி பெற்ற ஆடிக்கிருத்திகை இந்த மாதம் 2 நாட்களில் வருவதால் எந்த நாளில் யார் விரதம் இருக்கலாம்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Aadi Krithigai 2025 Fasting: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் ஒன்றாக ஆடிக்கிருத்திகை. ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே ஆடிக்கிருத்திகையாக முருக பக்தர்களால் போற்றி வணங்கப்படுகிறது. இந்த நன்னாளில் முருகனை தரிசிக்க உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
நடப்பாண்டில் ஆடி மாதத்தில் இரண்டு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இதனால், ஆடிக்கிருத்திகை ஜுலை 20ம் தேதி ( நாளை) அல்லது ஆகஸ்ட் 16ம் தேதியா? என்ற குழப்பம் பக்தர்களுக்கு எழுந்துள்ளது. இந்த இரண்டு நாட்களையும் ஆடிக்கிருத்திகையாக கருதி பக்தர்கள் போற்றி வணங்கலாம் என்று ஆன்மீக பெரியோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எந்த நாளில் என்னென்ன வேண்டுதலுக்கு விரதம் இருக்கலாம்? என்ற கேள்விக்கான விடையை கீழே காணலாம்.
நாளை யார் விரதம் இருக்கலாம்?
ஞாயிற்றுக்கிழமையான நாளை வரும் ஆடிக்கிருத்திகை ஏகாதசி நாளில் வருகிறது. விடுமுறை நாளான நாளை வீட்டு வேலையை கவனித்துக் கொண்டு விரதம் இருக்கலாம் என்று கருதுபவர்கள் நாளையே முருகனை வணங்கி வேண்டி விரதம் இருக்கலாம். இந்த நாள் சிவபெருமான், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய முப்பெரும் கடவுள்களும் இணைந்த நாட்களாகவே கருதப்படுகிறது. இன்று நள்ளிரவு 12.14 மணி முதல் நாளை இரவு 10.36 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் வருகிறது.

ஆகஸ்ட் 16ம் தேதி யார் விரதம் இருக்கலாம்?
ஆகஸ்ட் 16ம் தேதி வரும் கார்த்திகை நாள் அஷ்டமி நாளில் வருகிறது. கிருஷ்ணர் அவதரித்த கோகுலாஷ்டமியாக இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கடன் பிரச்சினை, தீராத சிக்கல்கள் இருப்பவர்கள் விரதம் இருக்க ஏதுவான நாள் ஆகும். ஆகஸ்ட் 16ம் தேதி காலை 8.27 மணிக்கு கார்த்திகை நடசத்திரம் தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6.48 மணி வரை இருக்கிறது. இந்த நாளில் அஷ்டமி திதி ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு 1.16 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நாளில் கிருத்திகை விரதம் இருப்பதால் கிருத்திகை பலனும், தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்த பலனும் ஒரு சேர கிடைக்கும். மேலும், நீண்ட நாட்கள் குழந்தை விரதம் வேண்டி காத்திருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பதும் சிறப்பு ஆகும். திருமண வரம் வேண்டுபவர்களும் இந்த நாளில் வணங்குவது சிறப்பு ஆகும்.
படையலிடுவது எப்படி?
ஆடிக்கிருத்திகை விரதம் இருப்பவர்கள் காலையிலே எழுந்து குளித்துவிட வேண்டம். பின்னர், முருகப்பெருமானை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும். ஷட்கோணம் எனும் ஆறு நட்சத்திர வடிவத்தில் கோலமிட்டு, அந்த கோலத்தில் அகல் விளக்குகளை நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
நைவேத்தியமாக காய்ச்சிய பாலில் தேன் கலந்து படையலிடலாம். அதனுடன் இனிப்புகள், பழங்கள் வைத்துக் கொள்வது அவரவர் விருப்பம். பின்னர், முருகனை மனதார நினைத்து கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஓம் சரவண பவ, முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற மந்திரத்தை மனதார வேண்டி கூறி வணங்கலாம்.
இரண்டு நாட்களும் விரதம் இருக்க முடிந்த பக்தர்கள், விரதம் இருப்பது அவர்களுக்கு கூடுதல் சிறப்பு ஆகும். உடல்நலன் ஒத்துழைக்க இயலாத பக்தர்கள் மனதார முருகனை வேண்டிக்கொள்வதே போதுமானது ஆகும்.






















