Aadi Krithigai 2023: அரோகரா...அரோகரா...குமரக்கோட்டம், திருப்போரூர் கோயில்களில் குவிந்த பக்தர் கூட்டம்
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் மற்றும் திருப்போரூர் முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு தரிசனம்.
திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான முருகன் கோவில்களில் ஒன்றாக திருப்போரூர் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் சித்திரை, மாசி, கார்த்திகை, ஆடிக்கிருத்திகை விஷேசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழா நடந்தது. விழாவையொட்டி மூலவருக்கு, மஹா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மொட்டை அடித்து, அலகு குத்தி, காவடி எடுத்து நேத்தி கடன் செலுத்தி வருகின்றனர். முருகன் திருக்கூட்டத்தாரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது. குடிநீர், சுகாதாரம், சிறப்பு பேருந்து வசதிகள், பாதுகாப்பு என அந்தந்த அரசு துறையினர் மூலம் செய்யப்பட்டிருந்தன. கிருத்திகை விழாவில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த, திரளான பக்தர்கள் தரிசன மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி கிருத்திகையை ஒட்டி குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காவடி எடுத்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சியப்பர் சிவராச்சாரியார்களால் கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான அருள்மிகு குமரகோட்டம் முருகன் கோவிலில் இன்று ஆடி கிருத்திகை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.க ந்தன் என்றாலே, நமக்கு நினைவு வருவது கந்தபுராணம் தான். கந்தபுராணம் தோன்றிய திருத்தலமும், கந்தபுராணம் அரங்கேறிய திருதலமும், காஞ்சிபுரம் குமரக்கோட்டம், சுப்பிரமணியர் திருக்கோவில் தான். மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் பெற்றதாக, இக்கோவில் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டுள்ளது. இக்கோவில் காஞ்சிபுரம் நகர் பகுதியில், அமைந்துள்ளது. மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சிதருகிறார்.
ஆடி கிருத்திகை ஒட்டி அதிகாலையில் இருந்தே வேலைக்கு செல்லும் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பல்வேறு மலர்களால் தோரணை கட்டி விசேஷமாக அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தும், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரித்து ராஜ தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் அரோகரா, அரோகரா என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.