ஆடி வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத 2 வது வெள்ளி கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக ஆடிமாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடிமாத 2 வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வருகை தர தொடங்கினர். பொதுமக்கள் பலர் கட்டண வரிசைகளிலும், பொது தரிசன வரிசையிலும், நீண்ட வரிசையில் நின்று அம்மனை பக்தியுடன் வணங்கி சென்றனர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் தரையில் விழுந்தும் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தனர். மேலும் அக்னி சட்டி ஏந்தியும், முடி காணிக்கை செலுத்தியும் சாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து சமயம்புரம் மாரியம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பு பணியிலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும் சமயபுரம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார், மாரியம்மன் கோவில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்