ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் 17 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள்- அமைச்சர் சேகர்பாபு
சொர்க்கவாசல் திறப்புக்கு 300 பேருக்கு ரூ. 4000 கட்டணத்திலும், ஆயிரம் பேருக்கு ரூ. 700 கட்டணத்திலும் சிறப்பு தரிசன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஓதுவார் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 108 திவ்ய ஆலயங்களில் முதல் ஆலயமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயகியை சேவித்து விட்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இங்கு எடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளேன். வருகிற 2-ம் தேதி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் பகல் 10 நிறைவு நிகழ்ச்சியிலும், வருகிற 12-ம் தேதி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியிலும் வருகை தருகின்ற பக்தர்களுக்கு சிறப்பான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 20 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் 17 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் 3000 காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். தலா 10 டாக்டர்கள், நர்சுகள், 6 மருந்தாளுனர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருக்கோவில் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது தவிர நான்கு கோபுரங்களில் முன்பும் நடமாடும் மருத்துவக் குழு அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்படும் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்க மூன்று ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்துள்ளோம். தீத்தடுப்புக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். ஏற்கனவே ஒரு மணி நேரத்துக்கு இந்த கோவிலில் 1,800 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்போது 12 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 200 தூய்மை பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட இருக்கிறார்கள். தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்படும். மேலும் கூடுதலாக 3 இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் துணை ஆணையர்கள் என 20 பேரும், மேலும் 100 இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களும் சொர்க்கவாசல் சிறப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குறிப்பாக திருவண்ணாமலையில் 25 லட்சம் பக்தர்கள் மகா தீபத்தை பார்வையிட்டனர். அப்போது செய்யப்பட்ட முன்னேற்பாடுகளால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை. அதேபோன்று ஸ்ரீரங்கத்திலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும். சொர்க்கவாசல் திறப்புக்கு 300 பேருக்கு ரூ. 4000 கட்டணத்திலும், ஆயிரம் பேருக்கு ரூ. 700 கட்டணத்திலும் சிறப்பு தரிசன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 4000 கட்டணத்துக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளார்கள். கட்டணத்தை உயர்த்தி உள்ளதே அதன் எண்ணிக்கையை குறைத்து சாதாரண மக்களுக்கு தரிசனத்திற்கு வழி விடுவதற்காக தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன் தினமே அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதலமைச்சர் பொறுப்பேற்றபோது கொரோனா எந்த அளவுக்கு இருந்தது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் முழு மூச்சாக அதனை எதிர்கொண்டு எங்களை எல்லாம் களத்துக்கு அனுப்பி கொரோனாவை கட்டுப்படுத்தினார். வருமுன் காக்கும் அரசாக இருந்து நிச்சயமாக கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும், தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவருக்கு எப்போதும் போல இடையூறு இல்லாமல் சிறப்பு தரிசனத்திற்கு வழிவகை செய்யப்படும். திருப்பதி போன்று இங்கும் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய ஆலோசித்து வருகின்றோம் என தெரிவித்தார்.