ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Iran Israel War In Tamil: இஸ்ரேல் நாடு உருவாகியதில் ஆதரித்த நாடுகளில் ஈரானும் ஒன்று. ஆனால் , தற்போது இருவரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
Iran Israel War In Tamil: இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலையானது நிலவுவதை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், எப்படி பரம எதிரிகளாக மாறினர். இந்தியா யார் பக்கம் என்பது குறித்து பார்ப்போம்.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்:
கடந்த செவ்வாய்க்கிழமை, இஸ்ரேல் நாட்டின் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் பெரும்பாலான ஏவுகணைகளை, வானிலையே தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் , பல ஏவுகணைகள், இஸ்ரேலின் தடுப்பு அமைப்புகளை மீறி இஸ்ரேலை தாக்கியது என்று ஈரான் தெரிவித்தது. இதற்கு , கடுமையான பதிலடியை கொடுப்போம் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதில் தாக்குதலானது, மேலும் வலுவானதாக இருக்கும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் , மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இஸ்ரேலை ஏன் ஈரான் தாக்கியது.?
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கு இடையிலான போரானது, தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் “ ஹமாஸ்க்கு ஆதரவாக , லெபனான் நாட்டில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பும், ஈரானும் ஆயுதங்களை உதவி செய்து வருகிறது என இஸ்ரேல் கூறிவந்தது. இதனால், சில தினங்களுக்கு முன்பு, ஹமாஸ் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவையும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது.
மேலும், சில ஈரான் ராணுவ தளபதிகளையும் கொன்றது. இது ஈரானுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 180 ஏவுகணைகள் மூலம் தாக்கி இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
தோழர்கள் - மன்னராட்சி முறை ஒழிப்பு
1979 ஆம் ஆண்டு வரை , ஈரானில் மன்னராட்சி முறை நடைபெற்று வந்தது . பலவீ வம்ச மன்னராட்சியின் போது, ஈரான் நாடானது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் மிகவும் நட்புடன் இருந்தது. 1947 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட போது, அதை ஆதரித்த நாடுகளில் ஈரானும் ஒன்று.
மன்னராட்சியின் போது, மேற்கிந்திய நாடுகளின் பழக்கவழக்கம் திணிக்கப்பட்டதாகவும் , இஸ்லாமியர்களின் கலாச்சாரம் மழுங்கப்படிக்கப்பட்டு வந்ததாகவும், ஈரானின் இஸ்லாமிய மதத் தலைவர்கள் குற்றங்களை சாட்ட ஆரம்பித்தனர். அப்போது பெண்கள் பர்தா அணியக்கூடாது என்றும் கூறப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மன்னராட்சியை ஒழிக்க ஈரான் மதத் தலைவர்கள் சிலர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இஸ்லாமிய மத தலைவர் அயத்துல்லா கோமெய்னி தலையிலான போராட்டத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பலரின் தொடர் போராட்டங்களால் மன்னராட்சி ஒழிகிறது. குடியரசாட்சி தோன்றுகிறது. அயத்துல்லா கோமெய்னி ஈரானின் உச்ச தலைவராக மாறினார்.
எதிரிகளாக மாற்றம்:
இதையடுத்துதான், மன்னராட்சியின் போது நட்பு நாடுகளாக இருந்த அமெரிக்காவை மற்றும் இஸ்ரேலை எதிர்க்க ஆரம்பிக்கின்றனர் ஈரானின் புதிய அரசு அமைப்பினர். மேலும் , பாலஸ்தீன மக்களுக்கு அநீதியை இஸ்ரேல் ஏற்படுத்துகிறது எனவும் குற்றச்சாட்டு வைத்தது ஈரான். ஆனால், அப்போது ஈரான் இஸ்ரேல் இடை
யிலான பிரச்னை தீவிரமாக இல்லை. ஆனால், ஈரானிடம் ஒருவித அச்சம் இருந்தது. சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா, நமது அரசை கவிழ்த்து விடுமோ என்று. அதனால் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால், அதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முட்டுக்கட்டை போட நினைப்பதாகவும் ஈரான் நினைத்தது. சிறுசிறு பிரச்னையாக இருந்தது , நாளடைவில் , போர் சூழும் அளவுக்கு வந்துவிட்டது
கவசத்தை உருவாக்கிய ஈரான்:
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நட்பு நாடுகளாக இருப்பதாலும், இஸ்ரேலில் இருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கும் எனவும், இஸ்ரேல் நாட்டைச் சுற்றி ஆயுத குழுக்களை ஈரான் களமிறக்கியதாக கூறப்படுகிறது. மேலும் , அந்த குழுக்களுக்கு , ஆயுத பயிற்சி மற்றும் பொருளாதார உதவிகளையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களில் லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹீதி, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் முக்கிய குழுக்களாக பார்க்கப்படுகிறது.
இப்பொழுது புரிந்திருக்கும், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் தலைவர்களை கொன்றதற்கு ஈரான் ஏன் பதில் தாக்குதல்களை நடத்தியது என்று.
இந்நிலையில், ஈரான் தாக்குதலையடுத்து, பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில், இனிமேலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், எங்களின் தாக்குதல் கொடூரமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியா நடுநிலை வகிப்பது ஏன்:
மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்டவைகள் குரல் கொடுக்கின்றனர்.இந்தியா இஸ்ரேல் நாட்டுடன் தொழில்நுட்ப ரீதியான உறவை கொண்டுள்ளது. ஈரானில் சாபகார் துறைமுகத்தை கட்டமைத்து வருகிறது.இதனால், இந்த தருணத்தில் இரண்டு நாடுகளும் நட்பு நாடுகள் என இந்திய அரசானது நடுநிலை போக்கை கடைபிடித்து வருவதை உணர முடிகிறது.
ஒரு காலத்தில் உற்ற நண்பர்களாக ஈரான் - இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இருந்த வந்த நிலையில், தற்போது பரம எதிரிகளாக மாறியுள்ளது, அந்த நாடுகளுக்கு மட்டுமல்ல, உலக அளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம்.