(Source: ECI/ABP News/ABP Majha)
Ukrain Prez Zelensky: வாழ்க்க நாடகமா..! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கண்டுகொள்ளாத உலக தலைவர்கள்? புகைப்படங்கள் வைரல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற புகைப்படங்கள், இணையதளத்தில் வைரலாகியுள்ளன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை என்பது போன்ற புகைப்படங்கள், இணையதளத்தில் வைரலாகியுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா போர்:
கடந்தாண்டு ரஷ்யா தாக்குதலை தொடங்குவதற்கு முன்பு வரை, உக்ரைன் என்ற நாட்டை உலக நாடுகள் எதுவுமே பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது உக்ரைன் அரசியல் தொடங்கி அதன் வணிபம் வரையிலான பல்வேறு தகவல்களை உலக மக்கள் நா நுனியில் கொண்டுள்ளனர். குறிப்பாக, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியின் ஒவ்வொரு அசைவும் தவறாமல் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து போரிட அவருக்கு உலக நாடுகள் பலவும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான், நேட்டோ உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் யாரும், ஜெலன்ஸ்கியை கண்டுகொள்ளாத வகையிலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
வைரல் புகைப்படம்:
லிதுவேனியாவின் வில்னியஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், உச்சி மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்க, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டும் தோய்ந்த முகத்தில் தனியாக நின்றிருக்கிறார். உக்ரைன் நேட்டோவில் இணைவது தொடர்பான முடிவிற்கு மத்தியில் நடைபெற்ற சமூக விருந்தின் போது, ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என அந்த புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஜெலன்ஸ்கி வருகையை அங்குள்ள தலைவர்கள் விரும்பவில்லை எனவும், நேட்டோவை நிலையற்ற கூட்டணி என ஜெலன்ஸ்கி கூறியது அமெரிக்காவை கோபப்படுத்தி விட்டதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லையா?
அதேநேரம், ஜெலன்ஸ்கியை உலக தலைவர்கள் கண்டுகொள்ளவில்லையா என்பது தொடர்பான உண்மையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அதிபரின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கி தனது கணவரிடமிருந்து சில அடி தூரத்தில் ஒரு பெண் தலைவருடன் உரையாடுவதை புகைப்படத்தில் காண முடிகிறது. அந்த நேரத்தில் தான், ஜெலன்ஸ்கி தனியாக நின்றிருப்பது போன்ற புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நேட்டோ உச்சி மாநாட்டின் போது பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், லிதுவேனியா அதிபர் கிடானஸ் நாவ்செடா, இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலக தலைவர்கள் உடன் ஜெலன்ஸ்கி எடுத்துக்கொண்ட மற்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதிருப்தியில் ஜெலன்ஸ்கி:
உக்ரைனை நேட்டொ அமைப்பில் இணைப்பது குறித்து இந்த உச்சிமாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உக்ரைன் நாட்டிற்கு கூடுதலான ஆயுத உதவிகளை வழங்க தயார் நிலையில் உள்ளதாகவும், நிபந்தனகளை பூர்த்தி செய்வதோடு உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ளும்போது நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றும் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதனால், எதிர்பார்த்தபடியான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், ஜெலன்ஸ்கி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.