USA Election: ஹிலாரி கிளிண்டனுக்கு எமனாக இருந்த ஸ்விங் மாநிலங்கள்: அமெரிக்க அதிபரை தீர்மானிக்கும் அந்த 7 மாநிலங்கள்.!
USA Presidential Election 2024: அமெரிக்க அதிபர் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்விங் மாநிலங்களில் கடுமையான போட்டியானது இருக்கும் என எதிர்பார்கக்ப்படுகிறது. (இந்த செய்தி வெளியான தேதி நவம்பர் 4 )
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும், அமெரிக்க அதிபர் தேர்தலானது நாளை ( நவ.5 ) நடைபெறவுள்ளது. ஏனென்றால், உலக அளவில் ராணுவத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி முதல் நாடாக உள்ளது. ஆகையால், இவை எடுக்கும் முடிவுகள் பங்குச்சந்தை, போர், ஏற்றுமதி -இறக்குமதி, மற்ற நாடுகளின் நிர்வாகம் உள்ளிட்டவைகளில் கூட தாக்கமானது இருக்கும். இதன் காரணமாகவே , உலகில் ஏதாவது ஒரு இடத்தில் போர் நடந்தால்கூட , அமெரிக்காவின் தாக்கமானது இருக்கிறது என்று கேள்வி எழும், இல்லையென்றால் போரை நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுக்குமா எனவும் எதிர்பார்ப்புகள் எழும்.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் பதவியானது , எவ்வளவு முக்கியமானது என அறியலாம்.
அமெரிக்க தேர்தல் முறை:
அமெரிக்கா மிகவும் பழமை வாய்ந்த மக்களாட்சி நாடாகவும். இங்கு , நடைபெறும் தேர்தலானது சற்று வித்தியாசமானது என்றே சொல்லலாம். இங்கு 50 மாகாணங்கள் ( மாநிலங்கள் ) உள்ளன. இங்கு உள்ள ஒரு மாகாணங்களில் உள்ள இடங்களில், அதிக எண்ணிக்கையில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, மொத்த இடங்களும் அந்த கட்சிக்கு சென்றுவிடும் என்ற விதி உள்ளது.
உதாரணத்திற்கு, ஒரு மாகாணத்தில் 54 இடங்கள் இருக்கிறது என வைத்துக் கொண்டால் , 20 இடங்களில் குடியரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது என வைத்துக் கொள்வோம். 34 இடங்களில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது என வைத்துக் கொள்வோம். இந்நிலையில், அதிக இடங்களை வென்ற ஜனநாயக கட்சிக்கே 54 இடங்களும் சென்றுவிடும் என்பது விதியாகும். இதேபோல மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் உள்ள வெற்றி பெற்ற இடங்களை வைத்து, பெரும்பான்மை உள்ள கட்சியின் வேட்பாளரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
3 வகை மாநிலங்கள்:
அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அடிப்படையில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களை பெரும்பாலும் மூன்று வகைகளாக, சிவப்பு மாநிலங்கள், நீல மாநிலங்கள் மற்றும் ஸ்விங் மாநிலங்கள் என பிரிக்கலாம்.
1980 முதல் குடியரசுக் கட்சியினர் தொடர்ந்து வெற்றி பெற்ற மாநிலங்கள் சிவப்பு மாநிலங்கள், அதே சமயம் 1992 முதல் ஜனநாயகக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களை நீல மாநிலங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் ஸ்விங் மாநிலங்கள் , ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளை மாற்றி மாற்றி செலுத்தி வருகின்றனர்.
ஸ்விங் மாநிலங்கள்
ஆகையால், யாருக்குச் சொந்தம் இல்லாதவையாகவும், தேர்தலை முடிவை நிர்ணயிக்கும் காரணிகளாக, 7 ஸ்விங்க் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள், வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்கள்தான் ஸ்விங் மாநிலங்களாகும்.
கடும் போட்டி:
இந்நிலையில், கருத்து கணிப்பு முடிவுகளானது ஆரம்பத்தில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டிரம்ப்புக்கு சாதகமாக இருந்தது. அதிபர் பைடன் , போட்டியிலிருந்து விலகியதையடுத்து ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசுக்கு சாதகமாக இருப்பதாக கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால், சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்விங் மாநிலங்களில் போட்டியானது கடுமையாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன. வெற்றி பெறுபவர் 1 சதவிகிதம் இடைவெளிதான் இருக்கும் என தெரிவித்துள்ளதால், நாளை நடைபெறும் அமெரிக்க தேர்தலானது, கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016 தேர்தலில் , ஹிலாரி கிளிண்டன் வாக்கு சதவீத அடிப்படையில், அதிகம் இருந்தாலும் , ஸ்விங் மாநிலங்களில் தோற்றதன் காரணமாக தோல்வி தழுவியதில் இருந்து, ஸ்விங் மாநிலங்கள் முக்கியத்துவத்தை அறியலாம்.