Donald Trump: என் ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும்: டொனால்ட் ட்ரம்ப் உணர்ச்சிகரப் பேச்சு!
உங்களுக்காக, உங்கள் குடும்பத்தினருக்காக, உங்கள் எதிர்காலத்துக்காக நான் போராடுவேன். ஒவ்வொரு நாளும் என் உடலில் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன்- டொனால்ட் ட்ரம்ப்.
வல்லரசு நாடான அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து, முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பிறகு ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகிக்கத் தொடங்கினார். கமலா ஹாரிஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
தேவைக்கும் அதிகமாகவே ஆதரவு பெற்ற ட்ரம்ப்
50 மாகாணங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள 538 பிரதிநிதிகளில், 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். இதில் தேவைக்கும் அதிகமாகவே ஆதரவை ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இதன் அடிப்படையில், அமெரிக்காவின் 47ஆவது அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இதைத் தொடர்ந்து தன் குடும்பத்தினருடன் ட்ரம்ப், ஃப்ளோரிடா மாகாணத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
’’இந்தத் தேர்தல் வெற்றி, புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதிபர் தேர்தலில் மட்டுமல்ல மக்கள் சபை, செனட் சபையிலும் நமக்கே வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே
மக்களுக்கு சேவை செய்யும் இத்தகைய வேலையைப் போன்ற எதுவுமில்லை. இதுதான் உலகத்திலேயே முக்கியமான வேலை. உங்களுக்கு நான் அளித்த வாக்கை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே. இக்கட்டான சூழலில் எனக்குத் துணையாக இருந்த என் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
அனைத்து குடிமக்களுக்கும் ஒன்று சொல்கிறேன். உங்களுக்காக, உங்கள் குடும்பத்தினருக்காக, உங்கள் எதிர்காலத்துக்காக நான் போராடுவேன். ஒவ்வொரு நாளும் என் உடலில் உயிர் இருக்கும் வரை நான் போராடுவேன். பாதுகாப்பான, வலிமையான, செழிப்பான அமெரிக்காவை உருவாக்கும்வரை நான் ஓய மாட்டேன்.
என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலம்
நாட்டை சீரமைத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். அமெரிக்கர்களின் கனவுகள் ஒவ்வொன்றும் மெய்ப்படும். என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கப் போகிறது. என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் நம்பிக்கை வீண் போகாது’’.
இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.