"இந்தியாவில் பெட்ரோல் ரூ.250 " - பாக் மக்களிடம் உதாரணம் காட்டும் இம்ரான் கான்!
பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.250 ஆக விற்கப்படுகிறது பொருளாதார நிலையினை அதிகரிக்க நாமும் விலையேற்ற வேண்டிய நிலை வரலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்று நோயாலும், விலைவாசி உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு பிரதமர் இம்ரான் கான் 12,000 கோடி பாகிஸ்தானிய ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை (நவ.3) அறிவித்தார். “நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை அறிவிக்கப்பட்டிராத நலத்திட்ட உதவி இது. இதனால் பாகிஸ்தான் நலவாழ்வு அரசாக மாறுகிறது” என்று பெருமிதத்துடன் அவர் குறிப்பிட்டார். அடுத்த 6 மாதங்களுக்கு, பாகிஸ்தானின் ஏழைக் குடும்பங்களுக்கு கோதுமை மாவு, நெய், பருப்பு வகைகளை அவற்றின் விலையில் 3 சதவீதம் குறைத்து விற்கப்போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில், பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்றும், வரும் குளிர்காலத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதில் பிரச்சினை இருக்கும்; மக்கள் அதற்குத் தயாராக வேண்டும் என்றும் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாகிஸ்தான் 2021-23ஆம் ஆண்டுகளில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி இருந்தால்தான் பாகிஸ்தான் கடன்களிலிருந்து மீள முடியும் என்ற நிலையில் உள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் மக்களுக்கு செய்தி விடுத்துள்ளார். அதில், "பெட்ரோல் விலைகள் அதிகரித்து விட்டது என்று நீங்கள் கூறினாலும் இதுவும் கூட பாகிஸ்தானில் தான் விலை குறைவு என்று நான் கூறுவேன். விலையை அதிகரிக்க வேண்டும் இல்லை எனில் கடன் அழுத்தம் நம்மை காலி செய்து விடும். இந்தியாவில் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.250க்கு விற்கப்படுகிறது. பங்களாதேஷில் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பின் படி ரூ.200க்கு விற்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானில் நாம் ரூ.138க்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார் இம்ரான் கான்.
பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அரசை குறை கூறி வருகின்றனர். பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.8 14 காசுகள் அதிகரித்துள்ளன. இதனால், பெட்ரோல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் அரசை குறை கூறி வருகின்றனர். இந்நிலையில்தான் பெட்ரோல் விலையை உயர்த்த இந்தியாவை உதாரணம் காட்டி மக்களிடம் பேசியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.
மேலும் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்பது பாகிஸ்தான் மதிப்பில் ரூ 2.29 ஆகும். எனவேதான் லிட்டர் பெட்ரோல் ரூ.250 என்றும் இம்ரான் கான் பேசியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரன் கான் கருத்திற்கு அந்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நடுத்தர மக்களைப் பாடாய் படுத்தி வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மிகப்பெரிய தளர்வைக் கொடுத்தது மத்திய அரசு. தீபாவளிக்கு முந்தைய நாள் மத்திய அரசு பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்த நிலையில் வியாழக்கிழமை முதல் மக்கள் குறைக்கப்பட்ட புதிய விலையின் படி பெட்ரோல், டீசலை வாங்கி வருகின்றனர்.