இதெல்லாம் ஒரு விளக்கமா...பெண்களின் உயர்கல்விக்கு தடை விதித்தது ஏன்? சாக்குபோக்கு சொன்ன தலிபான்...!
இஸ்லாமிய நாடுகள் உள்பட பல நாடுகள், இது இஸ்லாம் கோட்பாட்டுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என ஜி - 7 நாடுகள் விமர்சித்துள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. தலிபான் அரசின் நடவடிக்கை உலக அளவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய நாடுகள் உள்பட பல நாடுகள், இது இஸ்லாம் கோட்பாட்டுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ளது. மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என ஜி - 7 நாடுகள் விமர்சித்துள்ளது.
இந்நிலையில், தடை குறித்து தலிபான் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முறையான ஆடை கட்டுப்பாடு உள்ளிட்ட விதிகளை மாணவிகள் பின்பற்றாததால் பல்கலைக்கழகத்தில் படிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தலிபான் அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் நடா முகமது நதீம் தெரிவித்துள்ளார்.
ஆடை விதி, பயணத்தின் போது ஒரு ஆண் உறவினருடன் செல்வது உட்பட பல இஸ்லாமிய வழிமுறைகளை மாணவிகள் புறக்கணித்துள்ளனர்.
அரசு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், "துரதிஷ்டவசமாக 14 மாதங்களுக்கு பிறகும், பெண்களின் கல்வி தொடர்பான இஸ்லாமிய அமீரகத்தின் உயர் கல்வி அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
திருமணத்திற்கு செல்வது போல் உடுத்தியிருந்தார்கள். வீட்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு வரும் சிறுமிகள், ஹிஜாப் பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
A day after of the Taliban BANNED female university education, women & girls have come out on the streets of Kabul protesting against the decree.
— Shabnam Nasimi (@NasimiShabnam) December 22, 2022
They chant —“Either for everyone or for no one. One for all, all for one”
Amplify their voices.pic.twitter.com/mWbf5Mtcr2
சில அறிவியல் பாடங்கள் பெண்களுக்கு ஏற்றதாக இல்லை. பொறியியல், விவசாயம் மற்றும் வேறு சில படிப்புகள் பெண் மாணவர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் ஆப்கானிய கலாச்சாரத்துடன் பொருந்தவில்லை. மசூதிக்கு உள்ளே மாணவிகளுக்கு மட்டும் கற்பிக்கும் மதரஸாக்களை மூட அரசு முடிவு செய்துள்ளது" என்றார்.
ஆயிரக்கணக்கான பெண் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக கல்விக்கு தடை விதித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.