POPE ON UKRAINE WAR: தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள்: கண்ணீர் விட்டு அழுத போப் பிரான்சிஸ்..
தியாக பூமியின் குழந்தைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள் என, உக்ரைன் போர் குறித்து பேசி போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இதுவரை நிறைவடையவில்லை. சில நாட்களில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் 10 மாதங்களை எட்டியுள்ளது. அண்மையில், இந்த போர் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போர் ஒரு நீண்டகால போராக இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போரில் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அதோடு, சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தையும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஏற்படுத்தியுள்ளது.
Pope Francis breaks down and cries while praying for an end to the annihilation of the Ukrainian people.
— Fred Davila (@freddavila) December 10, 2022
(I have not seen one clergy from the U.S. comment about the systematic murder of children, the elderly and frail of Ukraine - there will never be a pope like Pope Francis)… pic.twitter.com/6w5MFVjbFo
கண்ணீர் விட்டு அழுத போப்:
இந்நிலையில் தான், கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக வாட்டிகனில் இருந்து இத்தாலி தலைநகர் ரோம் சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தனது உரையின் நடுவில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். பின்பு உக்ரைன் போர் தொடர்பாக பேசிய போப், அந்நாட்டு மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறிப்பிட்டு பேசும்போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார். இதைக்கண்ட போப்பின் அருகில் இருந்த ரோம் மேயர் ராபர்டோ குவால்டியேரி உள்ளிட்டோர், போப்பால் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து, அவரைத் தேற்றினர்.
துன்பப்படும் தியாக பூமியின் குழந்தைகள்:
ஒருவழியாக தன்னை தானே தேற்றிக்கொண்டு பேசிய போப் பிரான்சிஸ், மாசற்ற கன்னியே, உக்ரைன் மக்களின் நிலையை நான் உங்களிடம் கொண்டு வர விரும்பினேன். உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், தந்தைகள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களது வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.
அதைதொடர்ந்து, உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் மக்கள் படும் துன்பத்தை கண்டு போப் வருந்தும் காட்சி பார்க்கும் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.