‘பிரதமர் மோடியின் பேச்சை புதின் கேட்பார்; போரை நிறுத்தச் சொல்லுங்கள்’ - உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை
இந்திய பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த அதிபர் புதினுடன் பேசுமாறு இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கோரிக்கை விடுத்துள்ளார். போரை நிறுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிடுவதற்காக காத்திருப்பதாக உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கூறினார். ரஷ்ய அதிபர் புதின் யாருடைய பேச்சை கேட்பார் என்று தெரியவில்லை என்றும், இந்திய பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யாவுக்கு இந்தியா அழுத்தம் தர வேண்டும் - உக்ரைன்https://t.co/wupaoCQKa2 | #Ukraine #UkraineRussia #UkraineRussiaConflict #Ukrain #Putin #NarendraModi pic.twitter.com/WEBorELZ2r
— ABP Nadu (@abpnadu) February 24, 2022
முன்னதாக, உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என்று ஐநா சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான சூழ்நிலை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்றும் அமைதியான தீர்வு வரும் என நம்புகிறோம் எனவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணிநேரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்