Ukraine Russia Tensions: உக்ரைன் மீது போரை தொடங்கியது ரஷ்யா - எச்சரிக்கை கொடுத்த விளாடிமிர் புதின்
Ukraine Russia Tensions: உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால், உலகம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த சூழலில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் ராணுவம் தனது ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை ரஷ்ய படைகள் மேற்கொள்ள வேண்டும். டான் பாஸ் பகுதியில் ரஷ்யா தனது ராணுவ தாக்குதல்களை தொடங்கும். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைனில் இருந்து உக்ரைன் ராணுவம் வெளியேற வேண்டும். உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டால் பதிலடி கொடுக்கப்படும். உக்ரைன் ராணுவத்தினர் தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு திரும்பி வீட்டுக்கு செல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் உத்தரவையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவுரை வழங்கியிருந்தது.