`போரில் கலந்து கொண்டால் சிறைவாசிகளுக்கு விடுதலை’ - உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி அதிரடி
உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களைக் கைவிட்டு, நாடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இரு நாட்டுத் தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்களின் அடிப்படையில், பெலாரஸ் நாட்டின் எல்லையில் ரஷ்யாவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும், போர் நிறுத்தம் குறித்தோ, வேறு பெரிய முடிவுகள் குறித்தோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியின் அலுவலகம் தரப்பில் உடனடியாக போர் நிறுத்தத்திற்குக் கோரிக்கை விடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா தரப்பில் பேச்சுவார்த்தையிலோ, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையிலோ என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் அவசர கால நடவடிக்கையாக உக்ரைன் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
`புதிய நடைமுறைகளின் மூலமாக அவசர கால நடவடிக்கையாக உக்ரைன் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டுகோள் விடுக்கிறோம்’ என உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். `எங்களோடு பலரும் நிற்பதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் எங்கள் குறிக்கோள் ஐரோப்பியர்களோடு இருப்பதும், அவர்களுக்குச் சமமானவர்களாக இருப்பதும் ஆகும். நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி.
உக்ரைன் நாட்டின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தரப்பில் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரி சின்யுக் சிறைவாசிகளிடம் அவர்களின் ராணுவப் பணி, கள அனுபவம், மன்னிப்பு முதலானவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சிறையில் இருந்த செர்கி டோர்பின் என்ற முன்னாள் ராணுவ வீரர் விடுதலை செய்யப்படுவதாகவும், அவர் கடந்த 2018ஆம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஒருவரைக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆண்ட்ரி சின்யுக் தற்போது செர்கி டோர்பின் தன்னுடைய படைக்குத் தேவையான வீரர்களைத் தேர்ந்தெடுள்ளார். கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றொரு முன்னாள் ராணுவ வீரரான டிமிட்ரி பாலபுகா என்பவரும் இந்தப் படையில் இடம்பெற்றுள்ளார்.
ரஷ்யப் படையினர் உக்ரைன் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருக்கும் சூழலில், உக்ரைன் அரசு குடிமக்களையும், சிறைவாசிகளையும் ஆயுதம் அளித்து போருக்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது.