65 லட்சம் பதிவுகள் நீக்கம்... தவறான தகவல்களுக்கு எதிராக ட்விட்டர் அதிரடி நடவடிக்கை..!
தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சமீப காலமாகவே, சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் அதிக அளவில் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமலுக்கு வரும் கடுமையான விதிகள்:
அதன்படி, ட்விட்டர் உள்பட 19 தொழில்நுட்பு நிறுவனங்கள், தங்களிடம் உள்ள தரவுகளை அரசிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல, தவறான தகவல்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமான தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சட்டங்களை பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகளாவிய வருவாயில் 6 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் குறிப்பிட்ட சமூக வலைதளத்தை இயக்க தடை விதிக்கப்படலாம்.
தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு வெளியிட்ட அதே நாளில், இந்த விவகாரத்தில் எத்தனை பதிவுகளை நீக்கியுள்ளோம் என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் தகவல் பகிர்ந்துள்ளது.
65 லட்சம் பதிவுகள் நீக்கம்:
ட்விட்டர் வெளியிட்ட தகவலின்படி, ட்விட்டரை உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 லட்சம் பதிவுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நீக்கப்பட்ட பதிவுகளை காட்டிலும் 29 சதவிகித அதிக பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதற்கு முன்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வந்தது. எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது, எத்தனை தகவல்களை அரசு கேட்டுள்ளது போன்ற தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும். வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய இணைய விதிகளில் ஒன்றாகும்.
ஜப்பான், தென் கொரியா, துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், தரவுகளை கோரி அதிக கோரிக்கைகளைச் சமர்ப்பித்த நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறிப்பிட்ட பதிவுகளை அகற்றுவதற்காக அரசாங்கங்களிடமிருந்து 53,000 சட்டக் கோரிக்கைகளைப் பெற்றதாக ட்விட்டர் கூறியுள்ளது. ட்விட்டர் எத்தனை கோரிக்கைகளுக்கு இணங்கியது என்பதை வெளியிடவில்லை.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நீண்ட இழுத்தடிப்புக்கு பின் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். 44 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.3.65 லட்சம் கோடி) கைமாறிய அந்நிறுவனத்தில் ஊழியர்கள் மட்டுமல்ல, ட்விட்டர் பயனாளர்கள் கூட மஸ்க்கின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். தினமும் தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வண்ணம் அவர் அதிரடியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.