Trump-Hamas Final Warning: “அதிகாரத்த விட்டுக்கொடுக்க மறுத்தா மொத்தமா அழிச்சுடுவேன்“ - ஹமாசிற்கு ட்ரம்ப் ஃபைனல் வார்னிங்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தில் சில முக்கிய அம்சங்களை ஹமாஸ் ஏற்காத நிலையில், அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுத்தால் மொத்தமாக அழிவை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பு அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மறுத்தால், மொத்தமாக அழிவை சந்திக்க வேண்டிவரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் என்ன கூறியுள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம்.
எகிப்தில் இன்று நடைபெறும் முக்கிய பேச்சுவார்ததை
இஸ்ரேல்-காசா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கான முக்கிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பேச்சுவார்த்தை இன்று எகிப்தில் உள்ள ரிசார்ட் நகராமான ஷர்ம் எல் ஷெய்க்கில் நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா, இஸ்ரேல், ஹமாஸ், கத்தார், துருக்கி மற்றும் இன்னும் சில மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஹமாஸிற்கு வார்னிங் கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதித் திட்டத்தில், அதிகாரத்தை விட்டுக் கொடுப்பது, நிராயுதபாணியாவது உள்ளிட்ட சில முக்கிய அம்சங்களை ஹமாஸ் அமைப்பு ஏற்கவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள பேச்சுவாத்தைகளுக்கு முன் நேற்று ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ட்ரம்ப், இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தில் இந்த போர் துவங்குவதற்கு காரணமாக இருந்த பாலஸ்தீன போராளிக்குழு(ஹமாஸ்) உண்மையில் அமைதியை விரும்புகிறதா, அதற்காக உறுதிபூண்டுள்ளதா என்பது விரைவில் தெளிவாக தெரியவரும் என கூறினார்.
மேலும், ஹமாஸ் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மறுத்தால், அவர்கள் ‘முழுமையான அழிவை‘ சந்திக்க வேண்டிவரும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தொடர்ந்து குண்டு வீசுவதை இஸ்ரேல் கைவிட வேண்டும்“ - மார்கோ ரூபியோ
இதனிடையே, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதை இஸ்ரேல் கைவிட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசியுள்ள அவர், "தாக்குதல்களின் நடுவில் பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது என்பதை இஸ்ரேலியர்களும் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன், எனவே தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் மற்றும் போராளிகளை நிராயுதபாணியாக்குவது ஆகியவற்றின் அடிப்படையில், நீண்டகால இலக்குகளை அடைவது "இன்னும் கடினமாக" இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, "காசாவில் ஹமாஸ் அல்லாத ஒரு அரசாங்க அமைப்பை மூன்று நாட்களில் அமைத்துவிட முடியாது, அதற்கு சிறிது காலம் ஆகும்," என்றும் ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை உலகம் முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமூகமான முடிவு எட்டப்பட்டு, போர் நிறுத்தம் அமலுக்கு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















