Trump Xi Jinping Meet: சீன அதிபரை சந்திப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு; எங்கயோ இடிக்குதா.? எதுக்காக மீட் பண்றார் தெரியுமா.?
அமெரிக்கா உடன் பிரச்னை நிலவிவரும் சூழலில், சீனாவுடன் இந்தியா நட்பு பாராட்டி வருகிறது. இந்நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், அவர் சொல்லும் காரணமே வேறு.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்தார். இதனால் பிரச்னை ஏற்பட்ட நிலையில், இந்தியாவும், சீனாவும் கைகோர்க்கத் தொடங்கிவிட்டன. இதனால் டென்ஷனாகியுள்ள ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால், அந்த சந்திப்பிற்கு அவர் கூறும் காரணம் வேறு. இருந்தாலும், ஒரு சந்தேகம் எழத் தான் செய்கிறது. சரி, அவர் கூறியுள்ள காரணத்தை தற்போது பார்க்கலாம்.
“சீன அதிபரை சந்திப்பேன்“ - ட்ரம்ப்பின் பதிவு கூறுவது என்ன.?
சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சீனா சோயா பீன்ஸ் வாங்காமல் இருப்பதால் நம் நாட்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரிகள் மூலம் நாம் ஏராளமான பணத்தை சம்பாதித்துவிட்டோம், அதிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து நமது விவசாயிகளுக்கு உதவப் போகிறோம். நம் விவசாயிகளை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். அதிபராக இருந்தபோது தூக்கத்தில் இருந்த ஜோ பைடன், சீனா நம்மிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விவசாய பொருட்கள், குறிப்பாக சோயா பீன்ஸ் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டார். ஆனால் இப்போது அனைத்தும் சரியாக நடக்கப் போகிறது. நான் நமது தேசபக்தர்கள் மற்றும் ஒவ்வொரு விவசாயியையும் நேசிக்கிறேன். இன்னும் 4 வாரங்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பேன். அப்போது சோயா பீன்ஸே முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்“ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு ஆட்டம் காட்டிய சீனா
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தபோது, இந்தியாவிற்கும், சீனாவிற்கும் அதிகமான வரிகளை விதித்தார். இதையடுத்து, அமெரிக்காவிடம் சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்தியது சீனா.
அமெரிக்காவை பொறுத்தவரை, சீனா தான் அவர்களது சோயா பீன்ஸை அதிகமாக கொள்முதல் செய்யும் நாடு. இந்நிலையில், சினா அந்த வர்த்தகத்தை நிறுத்தியதால், அமெரிக்க விவயாயிகள் ஆட்டம் கண்டு, பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் நடக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு செல்ல உள்ளார் ட்ரம்ப். அப்போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அவர் சந்திக்க உள்ளார். அப்போதுதான் சோயா பீன்ஸ் குறித்து சீன அதிபருடன் பேசுவேன் என குறிப்பிட்டு ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், அதை மட்டும் பேசாமல், வேறு சில விஷயங்களையும் ட்ரம்ப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்தியா தற்போது சீனா உடன் நெருக்கம் காட்டுவது, நிச்சயம் அமெரிக்காவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அதனால், அமெரிக்காவும் சீனாவுடன் நட்பு பாராட்டும் வகையில் ட்ரம்ப் ஏதேனும் பேச வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.





















