Trump Jinping Russia: உங்க உறவே ஊசலாடுது, இதுல இது வேறயா.?! ரஷ்ய போரை நிறுத்த ஜின்பிங் உதவுவார்: ட்ரம்ப் நம்பிக்கை
அமெரிக்கா-சீனாவின் உறவே ஊசலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உதவுவார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பலிக்குமா.?

மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க ட்ரம்ப் கோலாலம்பூர் கிளம்பிய நிலையில், அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்த, சீன அதிபர் ஜின்பிங் உதவுவார் என ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது நம்பிக்கை பலிக்குமா.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஆசியான் மாநாட்டிற்கு கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
இந்த தாக்குதலை ரஷ்யா நிறுத்துவதற்கு தேவையான உதவிகளை சீனா செய்வதை தான் பார்க்க விரும்புவதாகவும், ஷி ஜின்பிங்குடன் தனக்கு சிறந்த நட்பு உள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார். மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தப்படுவதை பார்க்க ஜின்பிங்கம் விரும்புவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஊசலாடும் அமெரிக்கா-சீனா நட்பு
தான் பதவியேற்ற பின் சீனா மீது கடுமையான வரிகளை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் கூட 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டினார். அரிய கனிமங்கள் ஏற்றுமதி தொடர்பாக சீனா விதித்த கட்டுப்பாடுகளை எதிர்த்து ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.
சீனா அது குறித்து முடிவெடுக்கவில்லை என்றால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள 55 சதவீத வரியுடன், கூடுதலாக 100 சதவீதம் விதித்து, மொத்த வரியை 155 சதவீதம் ஆக்கிவிடுவேன் என ட்ரம்ப் மிரட்டினார்.
ஆனால், சீனாவோ அதற்கு அசராமல், ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தக்க எதிர்வினை ஆற்றப்படும் என பதில் எச்சரிக்கை விடுத்தது. இதனால், ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையேயான நட்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
சீன அதிபரை சந்தித்து வர்த்தகம் குறித்து பேசும் ட்ரம்ப்
இந்த நிலையில் தான், மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டிற்கு செல்லும் ட்ரம்ப், மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஷி ஜின்பிங்கடன், இரு நாட்டு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அந்த பேச்சுவார்த்தையே எப்படி செல்லும் என தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த ஷி ஜின்பிங் உதவுவார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்னவே, இந்த போரை நிறுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளன. இந்நிலையில், அவரது இந்த புதிய நம்பிக்கை பலிக்குமா.? சீன அதிபரின் எண்ணம் என்னவாக இருக்கும்.? பொறுத்திருந்து பார்க்கலாம்.





















