Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் உறுதியாக இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆர்க்டிக் தீவு, கனடா மற்றும் வெனிசுலாவை அமெரிக்க பிரதேசங்களாக காட்டும் அமெரிக்காவின் வரைபடத்தைப் பகிர்ந்து, கிரீன்லாந்திற்கான தனது முயற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.
புகைப்படத்துடன் ட்ரம்ப்பின் பதிவு
இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்க்ததில் பதிவிட்டுள்ளார். அதில், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) கூட்டாளிகளை கேலி செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர்கள், ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருப்பது போலவும், அவர்களின் பின்னணியில் மாற்றியமைக்கப்பட்ட அமெரிக்க வரைபடம் இருப்பதையும் புகைப்படத்தில் காண முடிகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் குறித்து பேசிய ட்ரம்ப்
முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது கிரீன்லாந்து சூதாட்டத்தில் அதிகம் பின்வாங்காது என்று ட்ரம்ப் கூறினார். புளோரிடாவில் பேசிய அவர், ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கிரீன்லாந்திற்கு ஒரு தேசிய பாதுகாப்பு தேவை என்றும், டென்மார்க்கிடம் தற்காப்புத் திறன் இல்லை என்றும் கூறினார்.
இதேபோல், முன்னதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோருக்கு அனுப்பிய கடிதத்தில், டென்மார்க் பிரதேசம் குறித்த தனது கூற்றுக்களை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததோடு இணைத்துப் பேசினார். தனது டாவோஸ் பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்க பொருளாதாரம் உலகின் "வெப்பமான" பொருளாதாரம் என்று அவர் கூறினார்.
தனது மற்றொரு சமூக வலைதள பதிவில், ட்ரம்ப், "கிரீன்லாந்து தொடர்பாக நேட்டோவின் பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் மிகச் சிறந்த தொலைபேசி உரையாடல் நடந்ததாக" கூறினார். மேலும, "நான் அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிவித்தது போல், கிரீன்லாந்து தேசிய மற்றும் உலகப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது. இனிமேல் பின்வாங்க முடியாது - அதில், அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்," என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், "உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா மிகவும் சக்திவாய்ந்த நாடு" என்று ட்ரம்ப் வலியுறுத்தினார். "இதற்குப் பெரும் காரணம், எனது முதல் பதவிக்காலத்தில் நமது ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பியதாகும். அதன் மறுகட்டமைப்பு இன்னும் விரைவான வேகத்தில் தொடர்கிறது. உலகம் முழுவதும் அமைதியை உறுதி செய்யக்கூடிய ஒரே சக்தி நாம்தான் - மேலும் இது மிகவும் எளிமையாக, பலத்தின் மூலம் செய்யப்படுகிறது," என்று ட்ரம்ப் கூறினார்.
அவரது மற்றுமொரு பதிவில், ட்ரம்ப் மேலும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றி வைப்பது போல் தெரிகிறது. அருகிலுள்ள ஒரு பலகையில்: கிரீன்லாந்து, அமெரிக்கப் பிரதேசம், தோற்றுவிக்கப்பட்டது 2026 என்று எழுதப்பட்டுள்ளது.
டிரம்பின் கிரீன்லாந்து டார்கெட்
கடந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, கிரீன்லாந்தை அமெரிக்க பிரதேசமாக மாற்ற வலியுறுத்தி வந்த ட்ரம்ப், கராகஸ் மீதான அமெரிக்கத் தாக்குதல் மற்றும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்த பிறகு, தனது முயற்சியை மீண்டும் புதுப்பித்தார். ஆர்க்டிக்கில் அதன் மூலோபாய இருப்பிடத்தை கருத்தில் கொண்டு, டேனிஷ் பிரதேசத்தை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றுவது தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு உதவும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.




















