China Vs Trump: அமெரிக்க வர்த்தகப் போர்; “நீங்க செய்யுறது சரியில்ல, இறுதி வரை போராடுவோம்“ - சூளுரைத்த சீனா.?
சீனாவிற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்த நிலையில், வரிகளை வைத்து அச்சுறுத்துவது சரியல்ல என்றும், இறுதி வரை போராடுவோம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதியில் சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், சீனாவிற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவிலிருந்து முக்கிய மென்பொருள் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவித்த நிலையில், வரிகளை வைத்து அச்சுறுத்துவது சரியல்ல என்றும், இறுதி வரை போராடுவோம் என்றும் சீனா அறிவித்துள்ளது.
கேள்விக்குறியான ட்ரம்ப்-ஷி ஜின்பிங் சந்திப்பு
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். மேலும், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த கூடுதல் வரி நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதனால், சீனாவிற்கான வரி, ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன் சேர்த்து 130 சதவீதமாக உயரும்.
இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என்றும், அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். இந்நிலையில், தற்போது மீண்டும் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது சீனா.
இதனால், வரும் நாட்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையேயான சந்திப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
“வரி விதித்து அச்சுறுத்துவது சரியல்ல, இறுதி வரை போராடுவோம்“
இந்த சூழலில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் சமீபத்திய கட்டுப்பாடுகள், தடைகள் மற்றும் அதிக வரி விதிப்பை சீனா உறுதியாக நிராகரிப்பதாக கூறியுள்ளார்.
மேலும், தங்கள் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீனா எடுக்கும் என்றும், சீனாவிற்கு அதிக வரிகளை விதித்து அச்சுறுத்துவது சரியானது அல்ல என்றும், அவர் கூறியுள்ளார்.
அதோடு, கட்டணப் போர்கள் மற்றும் வர்த்தகப் போர்கள் விஷயத்தில், சீனாவின் நிலைப்பாடு நிலையானது என்றும், "அமெரிக்கா போராட விரும்பினால், தாங்களும் இறுதிவரை போராடுவோம் எனவும், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், தங்கள் கதவு திறந்தே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்கா தனது அணுகுமுறையை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், இருநாட்டு அதிபர்களும் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை வாயிலாக லின் ஜியான் தெரிவித்துள்ளார்.





















