Imran Khan Case: சிறையில் இருந்து வெளியே வருகிறார் இம்ரான் கான்...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
கிரிக்கெட் பிளேயராக இருந்தபோது பாகிஸ்தான் மக்களால் கொண்டாடப்பட்ட இம்ரான்கான் ஊழல் புகாரால் சிறையில் தள்ளப்பட்டார்
ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் பதவியை இழந்து, அரசியல் செல்வாக்கிலும் சரிவை சந்தித்துள்ளவர் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
கிரிக்கெட் பிளேயராக இருந்தபோது பாகிஸ்தான் மக்களால் கொண்டாடப்பட்ட இம்ரான்கான் ஊழல் புகாரால் சிறையில் தள்ளப்பட்டார். விளையாட்டையும் தாண்டி அரசியலில் ஆர்வமாக இருந்த இம்ரான்கான் 1996ம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வந்த இவர் 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவி ஏற்றார். ஆட்சிக்கு வந்த பிறகு இம்ரான்கான் மீதான சர்ச்சைகள் அதிகரித்தன. 2022ம் ஆண்டு பாகிஸ்தானில் நிலவிய கடும்பொருளாதார நெருக்கடி இம்ரான்கானை பதவியில் இருந்து கீழே தள்ளியது.
பதவி பறிபோனது மட்டும் இல்லாமல் மோசடி புகாரிலும் சிக்கினார். இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது அரசுமுறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அப்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்கள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது அந்நாட்டு அரசின் விதி. ஆனால், தனக்கு கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல், அவற்றை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக இம்ரான் கான் மீது புகார் அளிக்கப்பட்டது. பிரதமராக இருந்த போது தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருட்களை, அரசின் பரிசுப்பொருட்களை பராமரிக்கும் ”தோஷகானா” விடம் ஒப்படைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இம்ரான் கானிற்கு எதிராக ஊழல், மோசடி மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே மோசடி புகாரில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் கலவரம் வெடித்து, ராணுவம் குவிக்கப்பட்டது. இம்ரான் கானை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதற்கிடையே கடந்த 5ம் தேதி முறைகேடு வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் நீதிமன்றம் இம்ரான்கனை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
குற்றவாளியாக தண்டனை பெற்றதால் இம்ரான்கானின் எம்பி பதவி பறிபோனதுடன், அவரால் 5 ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட முடியாத சூழலும் ஏற்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி அமீர் ஃபரூக் மற்றும் நீதிபதி தாரிக் முகம்மது, குற்றவழக்கில் இருந்து இம்ரான் கானை விடுத்து தீர்ப்பளித்தனர். இதன் மூலம் தண்டனை பெற்று ராவல்பிந்தி சிறையில் இருக்கும் இம்ரான்கான் ஜாமீனில் வெளியே வரவுள்ளார்.