Bondi Beach: அதிகாலை சூரிய வெளிச்சத்தில், ஒரே இடத்தில் நிர்வாணமாக நின்ற ஆயிரக்கணக்கானோர்.. காரணம் இதுதானாம்..
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண், பெண் என இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர், விழிப்புணர்வுக்காக கடற்கரை ஒன்றில் நடத்திய நிர்வாண ஃபோட்டோ ஷூட் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலக அளவில் அதிகப்படியான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது கொடிய நோய் புற்றுநோய். உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றத்தால், தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுவதாலும், அதேநேரம் பழைய செல்கள் இறக்காமல் இருப்பதாலும், அவைகள் ஒன்று சேர்ந்து புற்றுநோய்க் கட்டியாக மாறுகின்றன. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில், ஆஸ்திரேலியாவும் முன்னிலையில் உள்ளது.
தோல் புற்றுநோய் பாதிப்பு:
ஆஸ்திரேலியாவில், புரோஸ்டேட், மார்பகம், பெருங்குடல் , மெலனோமா மற்றும் நுரையீரல் புற்றுநோய், ஆகிய புற்றுநோய் வகைகள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டில் மட்டும் 17,756 பேர் புதியதாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என்றும், 1,281 ஆஸ்திரேலியர்கள் அந்நோயால் இறக்கக் கூடும் என்றும் அந்நாட்டு அரசு கணித்துள்ளது. உலக அளவில் தோல் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
2,500 பேர் நிர்வாண ஃபோட்டோ ஷுட்:
இந்நிலையில்தான், தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த, வெகுஜன நிர்வாண புகைப்படம் எடுப்பதில் பிரபலமான புகைப்படக் கலைஞரான ஸ்பென்சர் துனிக் ஈடுபட்டார். அதற்காக சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் அதிகாலையில் நிர்வாண ஃபோட்டோ ஷுட் ஒன்றை நடத்தினார். இதற்காக ஆண்கள், பெண்கள் என 2,500-க்கும் அதிகமானோர் அதிகாலை 03.30 மணி முதலே ஆர்வமுடன் கடற்கரைக்கு வந்ததோடு, ஆடைகள் இன்றி புகைப்படங்களுக்கு ஃபோஸ் கொடுத்தனர். கடற்கரையில் ஒருவருக்கு ஒருவர் அருகருகே நின்றபடியும், மணலில் படுத்தபடியும் அங்கு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.
பரிசோதனையை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி:
ஸ்கின் செக் சாம்பியன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, ஆஸ்திரேலியர்கள் தங்கள் சருமத்தை சீரான இடைவெளியில் பரிசோதிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தியதாக, புகைப்படக் கலைஞர் துனிக் கூறினார். மேலும், தனது கலையின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு துனிக் நடத்திய ஃபோட்டோ ஷுட்டின் போது, அங்குள்ள ஒபேரா அவுஸில்5,200 ஆஸ்திரேலியர்களை கொண்டு நிர்வாண ஃபோட்டோ ஷுய் நடத்தியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் அறிவுரை:
இதனிடையே, புற்றுநோயில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. பாதிப்பின் அளவு, குணப்படுத்தலின் கால அளவு, போன்றவற்றை புற்றுநோயின் தன்மையும் வகையும் முடிவு செய்கின்றன. ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டால் அதனை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது என்றே மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஏற்படும் புற்று நோய்கள் 40 விழுக்காடு புகையிலை தொடர்புடையதாகவும். 20 விழுக்காடு தொற்று தொடர்புடையதாகவும், 10 விழுக்காடு பிற காரணங்களாலும் ஏற்படுகின்றது.