ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா- ஜோ பைடன் மீது குற்றச்சாட்டு
ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக டென்மார்க் உள்ளது. அந்த நாடு இணையதள வசதிக்காக கடலுக்கு அடியில் கேபிள்களை பதித்து, அதன் மூலம் இணைய சேவை பெற்று வருகிறது. தங்களது நாடு மட்டுமன்றி சுவீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடனும் தகவல் பரிமாற்றத்தில் டென்மார்க் ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் டென்மார்க் ராணுவ உளவு பிரிவினர் உள்நாட்டு புலனாய்வில் ஈடுபட்டனர். அப்போது, ஜெர்மன் நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கஸ் உள்பட ஐரோப்பிய நாட்டின் முக்கிய தலைவர்களை அமெரிக்க உளவு பார்த்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் கேபிள் தடத்தின் வழியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினர் சுவீடன், நார்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகளை உளவு பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் இந்த உளவு பார்க்கும் பணிகள் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்று வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐரோப்பிய நாட்டின் அதிபர்கள் மட்டுமின்றி முக்கிய நாடுகளின் அமைச்சர்களையும் அமெரிக்க உளவு பார்த்திருப்புது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த பிராங்க்-வால்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பீர் ஸ்டீபன்பிரக் ஆகியோரையும் அமெரிக்கா உளவு பார்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையினர் டென்மார்க் நாட்டினர் பதித்த கேபிள் தடத்தின் மூலமாக இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, குறுஞ்செய்திகள், முக்கிய தரவுகள் உள்பட பல தகவல்களை சேகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை உளவுபார்த்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரையில், அந்த நாட்டின் அதிபராக பராக் ஒபாமா இருந்தார். மேலும், அப்போது அமெரிக்காவின் அதிபராக பொறுப்பு வகிக்கும் ஜோ பைடன் தான் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் ஜோ பைடன்தான் முக்கிய குற்றவாளி என்று எட்வர்டு ஸ்னோடென் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் எட்வர்டு ஸ்னோடென் என்பது குறிப்பிடத்தக்கது.