Thailand King Assets: 38 விமானங்கள், 52 படகுகள், 300 கார்கள்.. ஆனாலும் தாய்லாந்தில் தங்காத பிளேபாய் மன்னர் வஜிரலோங்கோர்ன்
தாய்லாந்து மன்னரான வஜிரலோங்கோர்னின் சொகுசு வாழ்க்கை முறை குறித்து, இந்த தொகுப்பில் அறியலாம்.
தாய்லாந்து மன்னரும், பிளேபாயாக கருதப்படுபவருமான வஜிரலோங்கோர்னின் வாழ்க்கை முறை, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்து மன்னர்:
அரசு குடும்பத்தில் பிறந்து சகல வசதிகளுடன்வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்று பிளேபாயாக சுற்றிக்கொண்டிருந்த வஜிரலோங்கோர்ன், தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு தாய்லாந்தின் மன்னராக கடந்த 2016ம் ஆண்டு பொறுப்பேற்றார். பாரம்பரிய சொத்துகள் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் தவிர்க்க முடியா இடத்தை பெற்றுள்ள இவரது வாழ்க்கை முறை, ஒரு சராசரி மனிதனுக்கு கனவிலும் கிட்டுமா என்பது கேள்விக்குறியே?
யார் இந்த வஜிரலோங்கோர்ன்?
தற்போது 70 வயதை கடந்த வஜிரலோங்கோர்ன் தாய்லாந்தின் மன்னராக பொறுப்பேற்ற பின், கிங் ராமா X என அடையாளப்படுத்தப்படுகிறார். 20 வயதை கடந்தபோதே இளவரசாக அறிவிக்கப்பட்டாலும், தனது 64வது வயதில் தான் மன்னராக பொறுப்பேற்றார்.
சொத்து விவரங்கள்:
உலக அளவில் தற்போதுள்ள மன்னர்களில் மிகவும் பணக்காரர் என்ற பெருமை தாய்லாந்து மன்னரையே சேரும். இவரது சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியனிலிருந்து 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதாவது இந்திய மதிப்பில் 3.5 லட்சம் கோடி வரையில் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. மன்னர் குடும்பத்தின் முக்கிய சொத்து அவர்கள் வசம் உள்ள 16,210 ஏக்கர் நிலம் தான். நாட்டின் தலைநகரான பாங்காக்கில் 17,000 உட்பட நாடு முழுவதும், நிலத்திற்கான 40,000 வாடகை ஒப்பந்தங்கள் உள்ளன. தலைநகர் பாங்காக்கில் மட்டும் மன்னர் குடும்பம் சுமார் 3,281 ஏக்கர் நிலத்தை தங்கள் வசம் கொண்டுள்ளது. அதன் சில பகுதிகள் வணிக மாவட்டத்தின் பிரதான ரியல் எஸ்டேட் பகுதிகளில் அமைந்துள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு மட்டுமே 33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க..
Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை
ரூ.100 கோடி மதிப்பிலான வைரம்..!
அதோடு உலகிலேயே மிகப்பெரிய faceted வரைமும், வஜிரலோங்கோர்ன் வசமே உள்ளது. 546.67 கேரட் பழுப்பு நிற வைரத்தின் மதிப்பு சுமார் 100 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோக பங்குச்சந்தையிலும் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது, 74 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மன்னரின் பெயரில் உள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
ரூ.223 கோடி செலவு:
வஜிரலோங்கோர்னின் பதவியேற்பு விழா இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ராணுவப் பயிற்சி பெற்ற இவர், பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களையும் ஓட்டும் திறன் பெற்றவர். வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது தனது போயிங் 737 விமானத்தை அவரே ஓட்டிச் செல்வதும் அரங்கேறி உள்ளது.
பெட்ரோல் செலவே ரூ.524 கோடியா?
பைனான்சியல் டைம்ஸின் வெளியிட்ட அறிக்கையின்படி, கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள தாய்லாந்து மன்னரிடம் லிமோசின், மெர்சிடிஸ் பென்ஸ் உட்பட 300 க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இது தவிர, ராயல் படகு அரச குடும்பத்தின் பழமையான அடையாளமாகும். அரச படகுடன் 52 படகுகள் கொண்ட கடற்படை உள்ளது. அனைத்து படகுகளிலும் தங்க வேலைப்பாடுகள் உள்ளன. மேலும், தாய்லாந்து மன்னரிடம் 21 ஹெலிகாப்டர்கள் உட்பட 38 விமானங்கள் உள்ளன. இதில் போயிங், ஏர்பஸ் விமானம் மற்றும் சுகோய் சூப்பர்ஜெட் உள்ளிட்டவை அடங்கும். விமானத்தின் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக மட்டுமே அவர் ஆண்டுக்கு ரூ.524 கோடி செலவு செய்வதாக கூறப்படுகிறது. கிராண்ட் பேலஸ் எனப்படும் தாய்லாந்து மன்னரின் அரச மாளிகை, 23,51,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. 1782 இல் முடிக்கப்பட்ட இந்த அரண்மனையில் பல அரசு அலுவலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளன.
ஆப்செண்ட் மன்னர்:
சொந்த நாட்டில் இத்தனை வசதிகள் இருந்தும் மன்னர் வஜிரலோங்கோர்ன் பெரும்பாலும் ஐரோப்பா நாடுகளில் தான் தங்கியுள்ளார். தாய்லாந்திற்கு வெளியே இருந்து தான் தனது அரசு நிர்வாகத்தை அவர் நடத்தி வருகிறார். நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்த போது, தனது பணிப்பெண்கள் 20 பேருடன் ஒரு பெரும் நட்சத்திர ஒட்டல் முழுவதையும் வாடகைக்கு எடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறபப்டுகிறது.
நான்கு முறை திருமணம்:
1977ம் ஆண்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியான சோம்சவாலி கிதியாகராவை திருமணம் செய்து கொண்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்து, நடிகை சுஜாரினி விவச்சரவோங்சேவை மணந்தார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் அவர்கள் பிரிந்தனர். ஸ்ரீரஸ்மி சுவாதி என்பவரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு பிரிந்தார். இறுதியாக மன்னராக பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக சுதிதா பஜ்ரசுதாபிமலலக்ஷனாவை மணந்தார்.
பிளேபாய் மன்னர்:
இளவரசராக இருந்த காலத்தில் இருந்தே சூதாட்டம், பெண்களுடன் சல்லாபம் மற்றும் சட்டவிரோத வணிகங்களுடன் தொடர்புகொள்வது என ஒரு பிளேபாயாகவும், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராகவே வஜிரலோங்கோர்ன் வலம் வந்தார். மன்னரான பிறகும் இதுதொடர்பான சர்ச்சைகள் அவரை விட்டு நீங்கவில்லை. இவர் தனது பெரும்பாலான நேரத்தை ஜெர்மனில் உள்ள பவாரியா எனும் மாகாணத்தில் கழிப்பதகாவும், அங்கு அவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக நான்கு நட்சத்திர விடுதி ஒன்றை வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மிரட்டல்:
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியில் கிராப் டாப்பில் சைக்கிள் ஓட்டுவது புகைப்படம் எடுக்கப்பட்டது. மன்னரின் அந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் வெளியானபோது, அந்த படங்கள் அவமானகரமானவை என்று கூறி அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டினார். வஜ்ரலாங்கோர்ன் பதவிக்கு வந்ததில் இருந்து, தனது தந்தையைப் போல அல்லாமல் தனது அதிகாரங்களை நேரடியான முறைகளில் அதிகம் பயன்படுத்தி வருகிறார். பாங்காக்கில் இரண்டு முக்கிய ராணுவப் பிரிவுகள் அவருடைய நேரடி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. தன்னை விமர்சித்ததற்காக 16 வயது சிறுமியை சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பேசுபொருளானது.