Task force pineapple: ஆஃப்கான் மக்களைக் காப்பாற்றிய ஆபரேஷன் அன்னாசிப்பழம் - இது Task Force Pineapple-ன் கதை!
உள்நாட்டுப் பாதுகாப்புப் படையிடம் பிஸ்முல்லா,தனது மொபைல் போனில் இருக்கும் ’பைனாப்பிள்’ படத்தைக் காண்பிக்க வேண்டும். அதைவைத்து அவர்தான் பிஸ்முல்லா என பாதுகாப்புப் படையினர் அறிந்துகொள்வார்கள்
ஆஃப்கானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பு குறித்த சர்வதேச கவனம் அவர்கள் கந்தஹாரையும் தலைநகர் காபூலையும் கைப்பற்றியதற்குப் பிறகுதான் அதிகரித்தது. காபூல் அதிபர் மாளிகையில் தலிபான்கள் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் காட்சியை ஒளிபரப்பிய ஊடகங்கள் அடுத்தது ’சீன் - 2’ இதுதான் என காபூல் விமானநிலையத்தை நெருக்கியடித்த ஆஃப்கான் மக்கள் கூட்டத்தைக் காண்பித்தது. விமானங்களின் கூரைகளின் மீதும் அதன் இறக்கைகளின் மீதும் அமர்ந்து நாட்டிலிருந்து தப்பி வெளியேற முயன்ற ஆஃப்கான் மக்களை சர்வதேசம் கையறுநிலையும் கனத்த இதயத்துடனும் கவனித்துக்கொண்டிருந்தது. ஆஃப்கான் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் வரை அமெரிக்கப் படைகள் அங்கிருந்து நகராது என்பதில் திட்டவட்டமாக இருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். தலிபான்களுடனான பேச்சுவார்த்தை உடன்படிக்கையின்படி அமெரிக்கப் படைகளுக்கு 31 ஆகஸ்ட் வரைக்கும் ஆஃப்கன் மண்ணில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆஃப்கன் மண்ணில் இருக்கலாம் என்றாலும் அவர்கள் காபூல் விமானநிலையத்தைக் கடந்து வெளியேற வரக் கூடாது என்பதில் தலிபான்கள் திட்டவட்டமாக இருந்தார்கள். பிறகு அத்தனை ஆஃப்கானியர்களையும் அமெரிக்கா விமானத்தில் ஏற்றிக் கொண்டு வந்தது எப்படி?
ஆபரேஷன் அண்ணாசிப் பழம்
அதற்கு நீங்கள் ஆபரேஷன் அன்னாசிப் பழத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்
அமெரிக்கப் படைவீரர் ஒருவர் ஆஃப்கான் படையைச் சேர்ந்த தனக்கு நெருக்கமான நண்பனையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்றப் போனது எப்படி பலநூறு ஆஃப்கானியர்களை மீட்க வழிவகை செய்தது என்பதுதான் ஆபரேஷன் அன்னாசிப்பழம்.
ஜாக் லாய்ஸ்
அமெரிக்காவின் சிறப்பு ஆயுதப்படையான க்ரீன் பெரட்டைச் சேர்ந்தவர் கேப்டன் ஜாக் லாய்ஸ்,12 வருடங்களுக்கு முன்பு ஆஃப்கானில் அமெரிக்க இராணுவப்படை சார்பாகப் பணியாற்றியவர். அப்போது ஆஃப்கான் சிறப்பு ஆயுதப் படையில் இருந்த பிஸ்முல்லா ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்திலிருந்து ஜாக்கின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஆஃப்கானில் தலிபான் படைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்ததும் ஜாக் முதல்வேலையாகத் தனது நண்பனின் குடும்பத்தை மீட்க முயற்சித்தார். ஏனெனில் தலிபான் ஆக்கிரமிக்கத் தொடங்கியதுமே அமெரிக்கப் படைகளுக்கு உதவியதற்காக அவர்கள் பிஸ்முல்லாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘நாம் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதியளித்துதானே அந்த மண்ணில் காலடி எடுத்துவைத்தோம். மேலும், பிஸ்முல்லா எனது நெருங்கிய நண்பன்.எங்களுக்காக உதவப் போய்தானே எனது நண்பனை அவர்கள் மிரட்டுகிறார்கள். எனது உயிர்த்தோழனை அங்கிருந்து மீட்பது எனது கடமை’ என்கிறார் ஜாக்.
தலிபான் ஆதிக்கத்துக்குப் பிறகு ஆஃப்கானில் தங்கியிருந்த அமெரிக்கப் படைகளை மீட்டுக் கொண்டுவருவதற்கும் ஆஃப்கானிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கும் அதிபர் ஜோ பைடன் அனுப்பிய சில ராணுவ வீரர்களில் ஜாக்கும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அமெரிக்க ராணுவ வீரர்கள் விமானநிலைய எல்லையைத் தாண்டக் கூடாது எனக் கட்டளை விதித்திருந்தது தலிபான். ஜாக்குக்கு அதனால் தனது நண்பனை மீட்பது எளிதாக இல்லை. விமானத்தில் இருந்தபடியே தனது நண்பனுக்கு போன் வழியாக விமான நிலையம் வந்தடையும் பாதையை விளக்குகிறார் ஜாக்.
தனது குடும்பத்தின் ஆறு உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு ஜாக்கின் உதவியுடன் காபூல் விமானநிலையம் வரப் பயணிக்கிறார் பிஸ்முல்லா. பிஸ்முல்லா வெளியேற ஆஃப்கான் உள்நாட்டு பாதுகாப்புப் படையும் உதவுகிறது. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையிடம் பிஸ்முல்லா,தனது மொபைல் போனில் இருக்கும் ’பைனாப்பிள்’ படத்தைக் காண்பிக்க வேண்டும். அதைவைத்து அவர்தான் பிஸ்முல்லா என பாதுகாப்புப் படையினர் அறிந்துகொள்வார்கள் என்பதுதான் ஜாக்கின் ப்ளான். இப்படிதான் ஆபரேஷன் அன்னாசிப்பழம் என்கிற Task Force Pineapple உருவானது. பிஸ்முல்லா பைனாப்பிள் படத்தைக் காண்பித்ததும் பாதுகாப்புப் படை அவரை ஒவ்வொரு ஆபத்தான பகுதியிலும் பத்திரமாக அழைத்துச் செல்கிறது. இப்படியே அவர் தனது குடும்பத்துடன் காபூல் விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.தனது ஒரு நண்பனைக் காப்பாற்ற ஜாக் போட்ட பிளானைப் பக்காவாக அனைவரும் பின்பற்றினார்கள். இப்படியாக ஆபத்தில் இருக்கும் ஆப்கானியப் படையினர் 700 பேர் வரை அமெரிக்கப் படை மீட்டது.
1,20,000க்கும் மேலான ஆஃப்கான் மக்களை அங்கிருந்து அமெரிக்கப்படை அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read: நடிக்க மறுத்த கமல்... டிஸ்கஷனில் வாக்குவாதம்... ட்ரெண்ட் உருவாக்கிய ‛ஜென்டில்மேன்’