‛அரசு சொத்துக்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்கவும்’ பொதுமக்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை!
அரச சொத்துக்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரச சொத்துக்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக 15 நாட்கள் ஆகிவிட்டன. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று நாட்டினை அழைக்குமாறு தலிபான்கள் கூறியுள்ளனர். மேலும், இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி அமையும் என்றும் விரைவில் முறைப்படி பதவியேற்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், முந்தைய அரசின் பணியில் இருந்த ஊழியர்கள், ராணுவ வீரர்கள் என அனைவரும் அரசு சொத்துக்களை ஒரு வாரத்துக்குள் ஒப்படைத்துவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலிபான்கள் செய்தித் தொடர்பாள ஜபிபுல்லா முஜாகீத் கூறியதாவாது:
காபூலில் உள்ளவர்கள் எவரேனும் முந்தைய அரசுடன் பணியாற்றி, அரசாங்கத்தின் வாகனம், கட்டிடம், ஆயுதம் இன்னபிற பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தால். அதனை தாமாகவே முன்வந்து ஒரு வாரத்துக்குள் அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு ட்விட்டரில் ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளதாக ஆப்கனின் அரசு ஊடகமான டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
செவிலியருக்கும் மட்டுமே ஓகே..
தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் பெண்கள் அலுவலகங்களுக்கு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சிறிது காலம் வீட்டிலிருந்தே பணி புரியுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் அங்கு சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இஸ்லாமிக் எமிரேட்ஸின் சுகாதார அமைச்சகமானது பெண் செவிலியர் அனைவரும் பணிக்கு வழக்கம்போல் வர வேண்டும் என்றும் அவர்களுக்கு எந்த வித கட்டுப்பாடும், நெருக்கடியும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததில் இருந்து இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறைந்தது 5 லட்சம் பேராவது வெளியேறுவார்கள் என்று ஐ.நா கணித்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்துறை நிபுணர்களும் கணிசமாக வெளியேறி வருகின்றனர்.
இதனையொட்டி தலிபான்கள் அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானைக் கட்டமைக்க நிபுணர்களின் சேவை அவசியம் ஆகையால் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
நாளையுடன் முடியும் கெடு:
காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கால அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 31) முடிவடைகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கி ஆப்கனிலிருந்து வெளிநாட்டவரும், ஆப்கன் மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆப்கன் மக்கள், கத்தாரில் உள்ள அமெரிக்க பேஸில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல மேலை நாடுகள் தங்கள் நாட்டவரை மீட்கும் பணியை முடித்துவிட்டதாக அறிவித்துவிட்டது. இந்தியா அவ்வப்போது மீட்புப் பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகளுக்கு தலிபான்கள் விதித்திருந்த கெடு நாளையுடன் முடிவடைவதால் விமான நிலையத்து வரும் வழியை தாலிபான்கள் சீல் வைத்துள்ளனர். இருப்பினும் கடைசி நேரம் வரை மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.