France Riot : ”பேரனோட மரணத்த வச்சி கலவரம் பண்றாங்க"... பிரான்ஸை உலுக்கி வரும் போராட்டத்திற்கு காரணமான சிறுவனின் பாட்டி பகீர்...!
பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. 6வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
France Riot : பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு பெரும் கலவரத்தை கிளப்பியுள்ளது. 6வது நாளாக இந்த போராட்டம் தொடர்ந்து வருவதால் பதற்றம் நிலவுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்
வடக்கு ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாக கொண்ட நஹெல் என்ற 17 வயது சிறுவன், பிரான்ஸ் நாட்டின் பாரீசின் புறநகரப் பகுதியான நான்டெர்ரேவில் காரில் சென்றுள்ளார். அப்போது, சிறுவனின் காரை காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது துப்பாக்கியை காட்டி சுட்டுக் கொல்வதாக மிரட்டியுள்ளனர். இதில் பதறிய அந்த சிறுவன் காரை எடுத்து கிளம்ப முயன்றார். அப்போது அந்த சிறுவன் நஹெலை துப்பாக்கியால் போலீசார் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த போராட்டம்
இதனால் பிரான்ஸ் நாடு முழுவதும் கலவர பூமியா மாறியது. கடந்த 6 நாட்களாக பிரான்ஸ் மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்த வன்முறையால் 200க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், சுமார் 75க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன, 250 வங்கிகள் சூறையாடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை சுமார் 719 பேரை போலீசார் கைது செய்தும், 1,300 பேரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பாரிஸ் நகரைச் சுற்றியுள்ள லியோன், பாவ், டௌலவ்ஸ், லில்லே உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் சுமார் 45 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேண்டுகோள்
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நஹெலின் பாட்டி நடியா என்பவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், "பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து 6வது நாளாக கலவரம் நடந்து வருகிறது. யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டும். தயவு செய்து நிறுத்துங்கள். நஹெலின் மரணத்தை வைத்து போராட்டத்தை நடத்த வேண்டாம். எனது பேரனோட மரணத்தை ஒரு சாக்குப்போக்காக வைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். எனவே கலவரத்தில் ஈடுபட வேண்டாம். பள்ளிகள், அலுவலங்கள், பேருந்துகளை தயவு செய்து உடைக்காதீர்கள்.
எனது பேரண் நஹேல் இறந்துவிட்டான். என் மகளுக்கு ஒரே ஒரு மகனாக நஹெல் இருந்தான். இப்போது அவர் இல்லை. அது முடிந்துவிட்டது. தயவு செய்து போராட்டத்தை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
பரவிய போராட்டம்
இதற்கிடையில் சிறுவனுக்கு ஆதரவான போராட்டம் அண்டை நாடுகளுக்கு பரவியது. சுவிட்சர்லாந்து நாட்டின் லொசேன் நகரில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கேயும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க