Opposition Meeting : திடீர் முடிவு...எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு...வேறு இடத்திற்கு மாற்றமா..? என்ன காரணம்?
பெங்களூருவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Opposition Meeting :பெங்களூருவில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாட்னாவில் நடந்த முதல் கூட்டம்
கடந்த 2014ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
எனவே, வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. அதன் முதல் முயற்சியாக, பிகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 23ல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 16 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2ஆம் கூட்டம் ரத்து
பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் இதில் ஆலோசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம், முதலில் ஜூலை மாதம், சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அதாவது பெங்களூருவில் ஜூலை 13,14ஆம் தேதி நடைபெறவிருந்து.
இந்நிலையில், தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், அதனை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மகாராஷ்டிரா அரசியிலில் அசாதாரணமான சூழல் ஏற்பட்டுள்ளதால், பெங்களூருவில் நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
என்ன காரணம்?
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர் சரத் பவார். அரசியல் சாணக்கியராக கருதப்படும் இவரால்தான் சாதிக்க முடியாத ஒன்றை எதிர்க்கட்சிகள் சாதித்தது. மகாராஷ்டிராவில் எதிரெதிர் துருவங்களாக கருதப்பட்ட காங்கிரஸையும் சிவசேனாவையும் இணைத்து கூட்டணி ஆட்சி நடத்தினார்.
ஆனால், தற்போது, இவருடைய கட்சியே இரண்டாக உடைக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார்.பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சூழலில், சரத் பவாருக்கு நேர்ந்துள்ள அரசியல் நெருக்கடி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும், நாடாளுமன்று மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடருக்கு பின்னர் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.