Sri Lanka Security : இலங்கையில் மீண்டும் வீரியமாகும் போராட்டங்கள்.. திடீரென அதிகரிக்கப்பட்ட இலங்கை அதிபரின் பாதுகாப்பு
இலங்கையில் போராட்டம் அதிகரித்து வருவதால், இலங்கை அதிபரின் பாதுகாப்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் போராட்டம்:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், மீண்டும் கடந்த இரு நாட்களாக அந்நாட்டு மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசை கலைத்து விட்டு புதிய ஆட்சி அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாளைய தினம் இலங்கையின் தலைநகரான கொழும்பில் பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது .
அனைத்து தரப்பினர் பங்கேற்பு:
இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இளைஞர்கள், யுவதிகள் மாணவர்கள் ,சர்வ மத தலைவர்கள், என அனைத்து தரப்பினரும் இன ,மத ,மொழி, பேதங்களை களைந்து தற்போது போராட்டங்களை நடத்திய வண்ணம் தலைநகர் கொழும்பை நோக்கி படையெடுத்து இருக்கிறார்கள். ஆகவே தற்போது உள்ள கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசை கலைத்துவிட்டு ,புதிய அரசை அமைத்து தமக்கு நிரந்தர தீர்வு வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இலங்கையின் மிகப்பெரிய எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ,மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று பெரிய அரசியல் கட்சிகள் இணைந்து தான் இந்த போராட்டத்தை நாளை முன்னெடுக்கின்றனர். இதனால் இலங்கை அதிபர் தற்போது தனக்கான பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதாகவே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அங்குள்ள அதிபர் மாளிகையை சுற்றி இரும்பு வேலிகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
காவல் அதிகரிப்பு:
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சில அரசியல் தலைவர்களின் பாதுகாப்பிற்காக பத்தாயிரம் படையினரும் நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இலங்கையின் தலைநகரான கொழும்பின் நிலை என்னவாக போகிறது என்பது தெரியவில்லை. இந்நிலையில் இலங்கையின் சகல மாவட்ட தலைநகரங்களில் இருந்து, கொழும்பை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். கொழும்பில் இன்றும், நாளையும் பெரிய அளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருப்பதன் காரணமாக நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் , மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுமாறு வலியுறுத்தி இருக்கிறார், வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் ட்விட்டர் வழியாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் இனப் பிரச்சனை தீர்க்கப்படாமல் அதை யுத்தமாக்கியது, இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது, தொடர்ச்சியாக அதிகளவான இறக்குமதி ,ஊழல் நிறைந்த நிர்வாகம் என நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. இன்று பல குடும்பங்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி வருகின்றனர். அடித்தட்டு மக்கள், குடும்பமாக தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்றாட வாழ்க்கை பாதிப்பு:
அரிசி , மாவு, சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் அதிகளவான உயர்வு , பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் நாட்களாக நீண்ட வரிசையில் இன்று பொருட்களை வாங்குகிறார்கள். பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் இவற்றுக்கான தட்டுப்பாடு ,பதுக்கல் காரணமாக மக்கள் அவதியுற்று வருகிறார்கள். தற்போது அங்கு மீன்பிடி பணிக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள். போக்குவரத்து, சமையல்,அன்றாட வேலைகளை செய்வதற்கு கூட எதுவும் இல்லாமல் மக்கள் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
புதிய அரசு அமைக்க கோரிக்கை:
ஒரு அரசு விழித்துக் கொள்ளாமல், தேசிய பாதுகாப்பு ,ராணுவத்தின் பாதுகாப்பு என்று மட்டுமே பின்னால் செல்வது ,மக்களின் வாக்குகளை வாங்கி விட்டு மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது, எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதுவரை இலங்கையில் எரிபொருளுக்காக ,மளிகை கடைகளில் வரிசைகளில் நின்ற சுமார் 20 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கூட சரி செய்ய முடியாத ஒரு அரசு எதற்கு? என மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஆகவே இந்த அரசை கலைத்துவிட்டு புதிய அரசு அமைத்து தங்களுக்கான அடிப்படைப் பிரச்சினைகளை யாவது சரி செய்து தருமாறு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.