13th Amendment: 13 வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் - நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதி..
இலங்கையில் 13 வது சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
![13th Amendment: 13 வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் - நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதி.. Sri Lankan President Ranil Wickremesinghe has said that the 13th Amendment will be fully implemented in Sri Lanka. 13th Amendment: 13 வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் - நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/427740c1945f51e86b9841a93846f8111691645466883589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கையில் 13 வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமலப்படுத்துவதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்புரையின் போது தெரிவித்தார்.
13வது திருத்தச்சட்டம் என்றால் என்ன?
இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் 1987 ஆம் ஆண்டு 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தமிழ் கிளர்ச்சி வேகமாக நடைபெற்றது, பின்னர் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே மோதல் போக்கு நிலவியது. குறிப்பாக தனித் தமிழ் நாடு கோரிக்கையை முன்வைத்தது இந்த கிளர்ச்சி நடைப்பெற்றது. அதுமட்டுமின்றி ராணுவத்தையும் களமிறக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்கு பின் அது வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
1948 இல் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையில் உள்ள தமிழர்கள் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அரசியல் சுயாட்சியைக் கோரியுள்ளனர். ஆனால் இலங்கையின் அனைத்து அதிகாரங்களும் மையத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, விவசாயம், நிலம், காவல்துறை, நிதி மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கு இந்த திருத்தச்சட்டம் வழங்கும். எனினும், நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் அது முழுமையாக தற்போது வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. மேலும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும், தமிழை அலுவல் மொழியாகவும் ஆக்குவதற்கும் வழிவகுத்தது.
தொடர்ந்து வலியுறுத்தும் இந்தியா:
இந்த ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து, 13 வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வந்தது. ஒருங்கிணைந்த இலங்கையை உருவாக்குவதற்கு, இன சமூகங்களுக்கிடையிலான பிரச்சினையில் நீண்டகால நல்லிணக்கத்திற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் 20 ஆம் தேதி அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்தார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையின் போது, அங்குள்ள சிறுபான்மை தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குவது தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை அமல்படுத்த இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த பயணத்திற்கு, முன்னதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க கொழும்புவில் முன்னணி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது முன்னாள் விடுதலை புலிகளின் மறுவாழ்வு குறித்தும் 13 வது திருத்தச் சட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவே இந்தியா விரும்புவதாகவும் அந்த கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உறுதியளித்த ரணில் விக்ரமசிங்க:
இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறப்புரையாற்றினார். அப்போது 13 வது சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். குறிப்பாக, “மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைத்து மாகாண சபைகளின் செயற்பாடுகளை அர்த்தமுள்ளதாக மாற்றும் வகையில் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். மாகாண சபையின் எதிர்கால பங்கு குறித்து நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். 13 வது சட்டத்திருத்தத்திற்கு இதுவரை எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் நாடாளுமன்றமே இறுதி முடிவெடுக்கும் வகையில் பிற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)