10 ஆண்டுகளுக்கு மேல் சிறை வாசம்: பொது மன்னிப்பு வழங்கிய இலங்கை - 8 தமிழர்கள் விடுதலை!
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ,10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த எட்டு தமிழ் கைதிகளுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறார்.
10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 8 தமிழ் கைதிகளுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு பொதுமன்னிப்பு அளித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த கைதிகளுக்கு இலங்கை அரசு பொதுமனிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது.
இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் குறித்த 8 தமிழ் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டதாகக் கூறி , பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ,10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த எட்டு தமிழ் கைதிகளுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கி இருக்கிறார்.
கடந்த நான்கு வருடங்களாக இலங்கையில் காணாமல் போனோரின் தாய்மார்கள் மற்றும்
உறவினர்கள் வீதியில் இறங்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அதேபோல் அண்மையில் தலைநகர் கொழும்பிலும் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாகவும் ,பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொடர் வலியுறுத்தலாலும், அதேபோல் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கோரிக்கை காரணமாகவும் கைது செய்யப்பட்டிருந்த 8 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டுள்ள எட்டு கைதிகளில் 3 பேர் இலங்கை அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக தண்டனை பெற்றவர்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அனுமதி பெற்ற பின்னரே , இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தண்டனை காலம் குறைக்கப்பட்டு கொழும்பு , மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் 4 கைதிகளும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டவர்களில் மூன்று குற்றவாளிகள் தங்களின் 30 வருட சிறைத்தண்டனையில் 22 காலத்தை அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் 5 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறையில் இருந்துள்ளனர், அதேபோல் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஒருவரும் ,10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த ஒருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களை முடித்துள்ள ஒருவரும் அடங்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறி, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழ் அரசியல் கட்சிகளும் , பல தன்னார்வ அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் நீண்ட காலமாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். சட்ட அமைப்பில் அதிகளவான நடைமுறைகள் இருப்பதால் விசாரணைக்கு காலம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு இலங்கைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. 2021 இல் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும் வரையில். வரிச்சலுகைகளை நிறுத்தி வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மக்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என இலங்கை அரசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியளித்திருந்தது.
அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இருவர், விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
மேலும் அடுத்த வருடம் தைப்பொங்கலுக்கு மேலும் பல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியலுக்கு கைதிகளை விடுதலை செய்ததற்காக புலம்பெயர் அமைப்புகள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளன.
அதேபோல் இலங்கைச் சிறைகளில் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யவும் புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.