Rajapaksa Resignation: ராஜினாமா செய்யணுமா..? அப்படி ஒரு திட்டமும் இல்லை.. ராஜபக்ஷ ராஜினாமா குறித்து பிரதமர் ஊடகப்பிரிவு விளக்கம்..!
பிரதமர் ராஜினாமா செய்யும் திட்டம் இல்லை என இலங்கை பிரதமரின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்தத்தகவல் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வழங்கியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து, பிரதமரின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் , “ கெளரவ பிரதமர் பதவி விலகுவதாக செய்திகள் உண்மைக்கு புறம்பானவை
கெளரவ பிரதமர் மஹிந்த ராகபக்ஷ பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். இது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்படையற்றவையாகும். அப்படியான திட்டம் இல்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக, கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் இலங்கை மக்கள் இந்த அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் திங்கள் கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
View this post on Instagram
இதற்கும் எதிர்ப்பு வலுத்த நிலையில், போராட்டங்களை ஒடுக்கும் விதமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் ஊரடங்கு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களை ஆளும் அரசு முடக்கியுள்ளது. ஊரடங்கு விதிகளை மீறியதாக கூறி, ராணுவத்தினர் 600க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.