Senthil Thondaman: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இன்று பதவியேற்றார்.
![Senthil Thondaman: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு Senthil thondaman appointed as srilanka eastern province governor check update Senthil Thondaman: இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/17/d559b1ac40778aed2593bbf6a7383cd41684326098617333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் இன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாணா ஆளுநர்:
இலங்கையின் கிழக்கு மாகாணம் சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூன்று தரப்பு மக்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். தற்போதைய சூழ்நிலையில் கிழக்கு மாகாண சட்டப்பேரவையும், உள்ளூராட்சி மன்றங்களும் காலாவதியாகி, தேர்தல் நடத்தப்படாமல் ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முழுப்பொறுப்பும் ஆளுநரிடம் இருப்பதால் அப்பகுதி மீது அதிக கவனம் செலுத்துவதற்காக அனுபவம் வாய்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற நிலையில், இளம் வயதில் ஊவா மாகாண முதலமைச்சர், அமைச்சர், பிரதமரின் இணைப்பு செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்து சிறப்பாக செயலாற்றிய ஒருவரான, செந்தில் தொண்டமான் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவியேற்றார்.
கிழக்கு மாநிலம் மும்முனை போட்டி நிலவும் ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தான் திரிகோணமலை இயற்கை துறைமுகம் அமைந்துள்ளது. இரண்டாம் உலக போரின் போது, திரிகோணமலை இயற்கை துறைமுகம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் பூகோள ரீதியாக அதிக வளம் நிறைந்த ஒரு மாநிலமாக கிழக்கு மாநிலம் திகழ்கின்றது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் திருக்கோணமலை துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. செந்தில் தொண்டமான் கிழக்கு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் இங்கு இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என தொழில் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?
முன்னதாக இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் அனைவரையும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைத்து ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. ஆனாலும், தமிழர்கள் இன பிரச்னை மட்டும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து உறுதி அளித்து வந்தாலும், அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சமீபத்தில் கூட, இலங்கை அரசு கொண்டு வந்த பயங்கரவாத எதிர்ப்பு மசோதா சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தது. குறிப்பாக, தமிழர்களை குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பிரச்னையை கையில் எடுத்த தமிழ் தேசிய கூட்டணி, போராட்டத்தில் ஈடுபட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு மசோதா:
புதிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை மார்ச் மாதத்தின் மத்தியில் இலங்கை அரசு, அரசிதழில் வெளியிட்டது. இலங்கை வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்கு என தனி நாட்டை உருவாக்குவதற்காக விடுதலை புலிகள் ஆயுதப் போரில் ஈடுபட்ட போது, அவர்களுக்கு எதிராக அரசாங்கப் படையினரால் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யாமலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தன்னிச்சையாக காவலில் வைக்க அனுமதிக்கும் PTA சட்ட விதிகளை சர்வதேச மனித உரிமைக் அமைப்புகளும் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் கட்சிகளும் கடுமையாக சாடியுள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)