Fire Accident : மதுபான விடுதியில் மளமளவென பரவிய தீ..! 15 பேர் மரணம்...! என்ன நடந்தது..?
பிரபல மதுபான விடுதியில் நடன தளத்தை நோக்கி குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் சுட்டதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
ரஷியாவின் கோஸ்ட்ரோமா நகரில் உள்ள மதுபான விடுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பல்வேறு ரஷிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரபல மதுபான விடுதியில் நடன தளத்தை நோக்கி குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் சுட்டதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
ஒற்றை மாடி கொண்ட தளவாட மையத்தில் அமைந்துள்ள பாலிகான் என்ற மதுபான விடுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மதுபான விடுதி, தீயில் சிக்கிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:00 மணியளவில் தீ பரவியதாகவும், காலை 7:30 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
WATCH: BNNRussia Reports.
— Gurbaksh Singh Chahal (@gchahal) November 5, 2022
A massive fire engulfed the night-club “Polygon” in the Russian city of Kostroma. The fire broke out late in the early hours of November 5. The signal for the fire was received by the local fire department at 2:47 AM. #Russia #accident pic.twitter.com/sVjuKMSu9M
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஆளுநர் செர்ஜி சிட்னிகோவ் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிற்கு வடகிழக்கே 300 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் உள்ள நகரத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பிடித்த கட்டிடத்திலிருந்து சுமார் 250 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அவசர சேவையில் பணிபுரியும் நபர் ஒருவர் தீ விபத்து குறித்து கூறுகையில், "குடிபோதையில் கை துப்பாக்கி வைத்திருந்த ஒரு நபர் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம். அவர் ஒரு பெண்ணுடன் மதுபான விடுதிக்கு வந்திருந்தார். அவரது கைகளில் ஒரு துப்பாக்கி இருந்தது. அவர் அழைத்து வந்த பெண்ணுக்கு பூக்களை ஆர்டர் செய்தார். பின்னர், அவர் நடன அரங்கிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டார். 3,500 சதுர மீட்டர் பரப்பளவில் தீ பரவியது" என்றார்.
அந்த விடுதியில் பாரம்பரியமான உணவு வகைகள் விற்கப்படுகின்றன. ஒற்றை மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள விடுதியில் தீ சூழ்ந்து கொள்வதும் அதை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்வதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.
இந்த பெரும் தீயை அணைக்க 50 பேர் தேவைப்பட்டதாகவும், 20 தீயணைப்பு இயந்திரங்கள் இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். குறிப்பாக, கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் தீயை அணைப்பது கடினமாக இருந்ததாக அவர் கூறினார்.
சுமார் 2,30,000 மக்கள் வசிக்கும் வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள கொஸ்ட்ரோமா நகரம், ரஷ்யாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பழங்கால கட்டிடக்கலை மற்றும் மடாலயங்களுக்கு பிரபலமானதாகும்.