Russia Ukraine War: “உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை; ஆனால்” - ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் - உக்ரைன் நாட்டு அதிபர்
உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், அங்குள்ள ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாகவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், உக்ரைன் மக்கள் மீதும், குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. அதிக அளவில் தற்காப்பு, அதிக பாதுகாப்பு கொண்ட ஆயுதங்களால் மட்டுமே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல என்றும், ராணுவ நடவடிக்கை எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்றும் அதிபர் புடின் கூறியுள்ளார்.
இதனிடையே, ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலை கனடா கண்டிப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் உக்ரைனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா.வின் அறிவுரையை ரஷ்யா மீறியுள்ளாதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
முன்னதாக, ரஷ்யாவின் குறுக்கே யார் வந்தாலும் அவர்கள் வரலாறு காணாத அளவில் அழிவை சந்திக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். மேலும், உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர். உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்