Russia Ukraine War: ராணுவ வலைப்பதிவர் படுகொலை விவகாரம்: வெளியானது பரபரப்பு வீடியோ
உக்ரைன் ரஷ்யா போர் பற்றி டெலிகிராமில் பதிவு செய்துவந்த ராணுவப் பதிவர் விளாட்லன் டட்டார்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டார்யா ட்ரெகோவா என்ற 26 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் பற்றி டெலிகிராமில் பதிவு செய்துவந்த ராணுவப் பதிவர் விளாட்லன் டட்டார்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக டார்யா ட்ரெகோவா என்ற 26 வயது இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் அமைந்துள்ள கபே ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குண்டு வெடிப்பில் அந்நாட்டின் ராணுவப் பதிவர் விளாட்லன் டட்டார்ஸ்கி கொல்லப்பட்டார். அந்த குண்டுவெடிப்பில் மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ரஷ்யாவைச் சேர்ந்த டார்யா ட்ரெபோவா என்ற இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு புலனாய்வாளர்கள் திங்களன்று உக்ரைனின் பாதுகாப்பு சேவைகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியுடன் தொடர்புடைய "முகவர்கள்" வெடிகுண்டு தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
கொல்லப்பட்ட விளாட்லன் டடார்ஸ்கி ரஷ்ய ராணுவத்திற்கு சார்பாக உக்ரைன் - ரஷ்யப் போர் செய்திகளைப் டெலிகிராமில் பதிவிட்டு வந்தார். விரிவான, உடனுக்குடனான அவரது பதிவுகளுக்காக அவரை அரை மில்லியனுக்கு அதிகமானோர் டெலிகிராமில் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் தான் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய - உக்ரைன் போருடன் நெருக்கமாக தொடர்புடைய நபர் ரஷ்ய மண்ணில் படுகொலையாவது தொடர்ந்து வருகிறது. ஏற்கெனவே இவரைப் போலவே ஒரு பதிவர் கொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு வீடியோ:
இந்தச் சூழலில் ஒரு வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பவர் டார்யா ட்ரெபோவா. இவரை சந்தேகப்படும் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசும் டார்யா ஏதோ வற்புறுத்தலின் பேரில் வாக்குமூலம் அளிப்பதுபோல் தோன்றுவதாக அதைப் பார்த்த இணையவாசிகள் சமூக வலைதள பின்னூடங்களில் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
டார்யாவிடம் ஒரு விசாரணை அதிகாரி நீங்கள் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா எனக் கேட்கிறார். அதற்கு டார்யா ட்ரெபோவா, தெரியும். விளாட்லன் டடார்ஸ்கி படுகொலை நிகழ்விடத்தில் இருந்ததற்காகவும். நான் கொடுத்த சிலை வெடித்ததற்காகவும் என்று கூறுகிறார்.
சரி உங்களிடம் யார் அதைக் கொடுத்தார்கள்? என்ன சொல்லிக் கொடுத்தார்கள்? என்று விசாரணை அதிகாரி கேட்கிறார். அதற்கு அந்தப் பெண், நான் இதற்கான பதிலை உங்களிடம் பின்னர் சொல்லலாமா எனக் கெஞ்சுகிறார்.
26 வயதான டார்யாவின் உடல்மொழி அவர் வற்புறுத்தலின் பேரில் பேசுவதாக இருப்பதாக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் இருந்தது என்ன?
ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் வெளியிட்ட அந்த வீடியோவில் நேற்று கஃபேவில் நடந்த விழாவிற்கு டார்யா ஒரு பிரவுன் நிற கோட் அணிந்து வருகிறார். அவர் கையில் ஒரு கார்ட்போர்ட் பெட்டி உள்ளது. அவர் கஃபேவில் அமர்வதற்கு முன்னதாக டேபிளில் அந்தப் பெட்டியை வைக்கிறார். இன்னொரு வீடியோவில் டடார்ஸ்கியிடம் ஒரு சிலை ஒப்படைக்கப்படுகிறது. அந்த சிலை சில நிமிடங்களில் வெடித்து அவர் உயிரைப் பறிக்கிறது.
இந்த வீடியோவை சாட்சியாக வைத்தே டார்யா ட்ரெகோவாவிடம் விசாரணை அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இன்னும் பல ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.