உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறேன்...ட்விஸ்ட் கொடுத்த ரஷ்ய அதிபர் புதின்...!
உக்ரைனும் அமெரிக்காவும் ரஷியாவின் கவலைகளை புறக்கணித்துள்ளதாகவும் உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி ரஷியாவை பலவீனமாக்க முயற்சி செய்வதாகவும் புதின் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 10 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷிய படைகள் திரும்பப்பெற்றுள்ளது.
இதற்கு மத்தியில், அணு ஆயுத பயன்பாடு குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பி இருந்தது. சமீப காலமாகவே, ரஷியா போரில் பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கி அந்நாடு புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக புதின் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். உக்ரைனும் அமெரிக்காவும் ரஷியாவின் கவலைகளை புறக்கணித்துள்ளதாகவும் உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி ரஷியாவை பலவீனமாக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய முயல்வோம். அதுவே, சிறந்தது.
எல்லாப் மோதல்களும் ஏதோ ஒரு விதத்தில் பேச்சு வார்த்தைகளுடன் முடிவடையும்.. நமது எதிரிகள் (கிய்வில்) எவ்வளவு வேகமாகப் புரிந்து கொள்கிறார்களோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும்" என்றார்.
போர் குறித்து ரஷியா ராணுவ தளபதி கூறுகையில், "கிழக்கு டோனெட்ஸ்க் பகுதியைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படைகள் இப்போது குவிக்கப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு உள்ளான பாக்முட் நகரம் போரின் மையமாக மாறியுள்ளது" என்றார்.
சமீப காலமாகவே, உக்ரைனுடனான பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை என ரஷியா அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர். ஆனால், புதின் அதிகாரத்தில் இருக்கும் வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட மாட்டேன் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வாஷிங்டனுக்கு அவர் திடீர் பயணம் மேற்கொண்டார். பிப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் உக்ரைனுக்கு வெளியே அவரது முதல் பயணம் இதுவே ஆகும். அப்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷ்யாவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என கூறினார்.
முன்னதாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து பேசிய புதின், "ஆக்ரோஷமான ரஷிய-விரோதக் கொள்கையில், மேற்குலக நாடுகள் அனைத்து எல்லையையும் மீறிவிட்டன.
இது ஒரு முட்டாள்தனம் அல்ல. அணு ஆயுதங்களை வைத்து நம்மை அச்சுறுத்த முயல்பவர்கள், அந்த ஆயுதங்கள் அவர்களை நோக்கி திரும்பிச் செல்லக்கூடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
போருக்கு பிறகு, பல்வேறு விவகாரங்களில் ரஷியாவுக்கு ஆதரவான நிலைபாட்டையே இந்தியாவும் சீனாவும் எடுத்துள்ளது. மேற்குலக நாடுகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தபோதிலும் ஐநாவில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருந்தது.