பயங்கரவாதத்தை எதிர்க்க நைஜிரியாவுன் கூட்டுசேரும் இந்தியா.! பிரதமரிடம் நன்றி தெரிவித்த நைஜிரியா அதிபர்
PM Modi - Nigeria: கலாச்சார பரிமாற்றத் திட்டம், சுங்க ஒத்துழைப்பு, கணக்கெடுப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்த மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களானது, இந்தியா - நைஜிரியா இடையே கையெழுத்தானது
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியாவில் நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அபுஜாவில், நைஜீரியாவின் அதிபர் திரு போலா அகமது டினுபுவுடன் இன்று அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். அரசு மாளிகையில் பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதையுடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
”இந்தியாவின் உதவிக்கு நன்றி”
இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பை நடத்தினர், அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டில் அதிபர் டினுபுவுடனான தமது அன்பான சந்திப்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். இரு நாடுகளும் பகிரப்பட்ட கடந்தகாலம், பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் வலுவான மக்களுக்கிடையிலான உறவுகளால் வரையறுக்கப்பட்ட சிறப்பு நட்பை அனுபவிக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு பிரதமர் தமது அனுதாபங்களை அதிபர் டினுபுவிடம் தெரிவித்தார். நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்பி, சரியான நேரத்தில் இந்தியா அளித்த உதவிக்கு அதிபர் டினுபு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
”கூட்டாக தீவிரவாதத்தை எதிர்ப்போம்”
இரு தலைவர்களும் தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்ததுடன், இந்தியா-நைஜீரியா வியூகக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். உறவுகளின் முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த அவர்கள், வர்த்தகம், முதலீடு, கல்வி, எரிசக்தி, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பிற்கு அபரிமிதமான வாய்ப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டனர். விவசாயம், போக்குவரத்து, மலிவு விலை மருத்துவம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் மாற்றம் ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டார். அதிபர் டினுபு, இந்தியா வழங்கும் மேம்பாட்டு ஒத்துழைப்பு கூட்டாண்மை மற்றும் உள்ளூர் திறன்கள், தொழில்முறை நிபுணத்துவத்தை உருவாக்குவதில் அதன் அர்த்தமுள்ள தாக்கத்தைப் பாராட்டினார். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பயங்கரவாதம், கடற்கொள்ளையர் மற்றும் தீவிரவாதத்தை கூட்டாக எதிர்த்துப் போராடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இந்தியா அழைப்பு
உலக மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உலகளாவிய தெற்கு உச்சிமாநாடுகளின் குரல் மூலம் வளரும் நாடுகளின் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்தியாவின் முயற்சிகளை அதிபர் டினுபு ஒப்புக்கொண்டு, பாராட்டினார். உலகளாவிய தெற்கின் வளர்ச்சி அபிலாஷைகளை பூர்த்தி செய்ய இணைந்து செயல்பட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமுதாயத்தின் தலைமை நாடாக நைஜீரியா ஆற்றிய பங்கு மற்றும் பலதரப்பு மற்றும் பன்முக அமைப்புகளுக்கு வழங்கிய அதன் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். நைஜீரியா, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, சர்வதேச பெரும்பூனை கூட்டணி ஆகியவற்றில் உறுப்பினராக இருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவால் தொடங்கப்பட்ட பிற பசுமை முயற்சிகளில் சேர அதிபர் டினுபுவுக்கு அழைப்பு விடுத்தார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கலாச்சார பரிமாற்றத் திட்டம், சுங்க ஒத்துழைப்பு, கணக்கெடுப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்த மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து பிரதமரைக் கௌரவிக்கும் வகையில் அதிபரால் அரசு விருந்து அளிக்கப்பட்டது.