Taliban Warns Pakistan: ‘வாடா, ஒரு கை பாத்துக்குவோம்‘; போருக்கு தயார் என தாலிபான்கள் அறிவிப்பு; பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மோதலை நிறுத்துவதற்காக, இஸ்தான்புல்லில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதற்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டிய தாலிபான் போருக்கு தயார் என அறிவித்துள்ளது.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தான் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகவும், ஓத்துழைப்பு வழங்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள ஆப்கானை ஆளும் தாலிபான்கள், போருக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல்
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், ஆட்சி நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 2021-ம் ஆண்டு கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுவை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் பொதுமக்கள் 50 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தலிபான் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேர் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் பெரியதானது.
தோல்வியடைந்த 2 கட்ட பேச்சுவார்த்தைகள்
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதலை நிறுத்தும் முயற்சியாக, மேற்காசிய நாடான கத்தாரில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், சண்டையை நிறுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. ஆனால், அதன்பின்னரும் தாக்குதல் தொடர்ந்த நிலையில், துருக்கியில் நடந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
“3-ம் கட்ட அமைதிப் பேச்சு - தோல்விக்கு பாகிஸ்தானே காரணம்“
இந்த சூழலில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மீண்டும் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதி என இரண்டு நாட்கள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கு, பாகிஸ்தானின் பொறுப்பற்ற தன்மையும், ஒத்துழைக்காத மனமும் தான் காரணம் என தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானிடமிருந்து யதார்த்தமான மற்றும் செயல்படுத்தக்கூடிய வகையிலான கோரிக்கைகளை முன்வைத்து அடிப்படை தீர்வு காணப்படும் என எதிர்பார்த்ததாகவும், பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தான் தங்கள் தரப்பு பாதுகாப்பு தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் ஆப்கன் மீது திணிக்க முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கான எந்த பொறுப்பையும் ஏற்க பாகிஸ்தான் விருப்பம் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் மக்களையும் பிரதேசத்தையும் பாதுகாப்பது எமிரேட்டின் "இஸ்லாமிய மற்றும் தேசிய கடமையாக" உள்ளது என்று ஆப்கானிஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் "அல்லாவின் உதவியுடனும் அதன் மக்களின் ஆதரவுடனும் எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராக உறுதியாகப் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
இந்த சூழலில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகள் "எந்த முடிவும் இல்லாமல் நிச்சயமற்ற கட்டத்தை எட்டியுள்ளன" என்பதை உறுதிப்படுத்தினார். மேலும், "நான்காவது சுற்றுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானின் பழங்குடியினர், எல்லைகள் மற்றும் பழங்குடி விவகாரங்களுக்கான அமைச்சர் நூருல்லா நூரி, "ஆப்கானியர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்" என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "தனது நாட்டின் தொழில்நுட்பத்தில் அதிக நம்பிக்கை கொள்ள வேண்டாம்" என்று ஆசிப்பை அவர் எச்சரித்தார். போர் வெடித்தால், "ஆப்கானிஸ்தானின் மூத்த குடிமக்களும் இளைஞர்களும் போராடத் தொடங்குவார்கள்" என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலில் மேலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.





















